கோவை: பாஜக நடத்தி வரும் யாத்திரைகள் மூன்றாம் அலை கொரோனா பரவுவதற்கு வழிவகுக்கும் என்று கோவையில் சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டினார்.
கோவை: பாஜக நடத்தி வரும் யாத்திரைகள் மூன்றாம் அலை கொரோனா பரவுவதற்கு வழிவகுக்கும் என்று கோவையில் சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டினார்.
சிபிஎம் மாவட்ட செயற்குழு கூட்டம் இரண்டு நாட்கள் கோவையில் நடைபெறுவதையொட்டி அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கோவைக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில், இன்று காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிஎம் மாவட்ட அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்றார். மேலும், தடுப்பு மருந்து இருப்பு குறித்து தெளிவான, வெளிப்படையான தகவலை மத்திய அரசு தெரிவிப்பதில்லை என்று குற்றம் சாட்டினார்.
தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய தமிழக முதலமைச்சர் செங்கல்பட்டு, குன்னூர் ஆகிய பகுதிகளில் அனுமதி கேட்டு உள்ளதாக கூறிய அவர், பெட்ரோலிய பொருட்களின் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளதை கண்டனம் தெரிவித்தார். மேலும், பெட்ரோலிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளால் மட்டுமே கடந்த 2020-21 ஆண்டில் 3.71 லட்சம் கோடி ஈட்டியுள்ளதாக தெரிவித்தார்.
பெட்ரோலிய பொருட்களின் மீது போடப்பட்ட வரியை குறைப்பதன் மூலமாகவே மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க முடியும். இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள், நீதித்துறையை சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற பலரும் பெகாசஸ் செயலி மூலம் வேவு பார்க்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், இதனை கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக கூறினார்.
ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து இந்தியர்களை காக்க அரசு தவறிவிட்டதாக தெரிவித்த அவர், எத்தனை இந்தியர்கள் இங்கு அழைத்து வரப்பட்டனர் என்ற தெளிவான எந்த தகவலும் அரசிடம் இல்லை என்றார்.
மேலும், ஆகஸ்ட் 14ம் தேதி பிரிவினை பயங்கரவாத நாளாக பாஜக அறிவித்துள்ளதாக தெரிவித்த அவர், 1938-ல் சவார்க்கர் இரண்டு தனி நாடாக வேண்டும் என்று வலியுறுத்தியதை சுட்டிக்காட்டினார். மேலும், 1940க்கு பின் முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்ததை சுட்டிகாட்டிய அவர், தற்போது இந்தியாவில் 126 இடங்களில் பாஜக யாத்திரை நடத்தி வருகிறது. இது கொரோனா மூன்றாம் அலை பரவுவதற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் எம்பி பி.ஆர்.நடராஜன், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.