கோவை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் முதல் பட்ஜெட்(2021-2022 ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை) ஆகஸ்ட் 13 தினத்தன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
கோவை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் முதல் பட்ஜெட்(2021-2022 ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை) ஆகஸ்ட் 13 தினத்தன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். தொழில் நகரான கோவை மாவட்டத்தில் தமிழக அரசின் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு தொழில்துறையினர் மத்தியில் அதிகரித்துள்ளது.
தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIEMA, சீமா) தலைவர், கார்த்திக் கூறியதாவது:
‘‘தமிழக அரசின் பட்ஜெட் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பட்ஜெட்டில் தமிழக தொழில் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இப்பணிகளுக்கு மத்திய அரசு திட்டங்களுடன் இணைந்து தமிழக அரசும் சிறப்பு மானியத்தை வழங்கி தொழில்துறையினரை ஊக்குவிக்க வேண்டும்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம், எதிர்வரும் ஆண்டுகளில் தமிழக தொழில்துறை தேசிய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் சிறந்து விளங்க வாய்ப்பை ஏற்படுத்தும். மேற்கு வங்கத்தில் ஒரு யூனிட் மின்சாரம் 4 ரூபாய் 50 பைசாவுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதேபோல், தமிழகத்திலும் தொழில்துறையினருக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் விநியோகிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் பவுண்டரி தொழில் நிறுவனங்கள் அதிக பயன் பெறும். அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் பவுண்டரி தொழில்துறை ‘தாய்' போன்ற முக்கியத்துவம் கொண்டுள்ளது. பவுண்டரி தொழில் சிறப்பாக இருந்தால் சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் சிறப்பாக வளர்ச்சி பெறும். அதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் ஒட்டுமொத்த தொழில்துறையிலும் அது எதிரொலிக்கும். குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை விநியோகிப்பதால் தென் மாவட்டங்களில் புதிதாக தொழில் தொடங்க தொழில்துறையினர் பலர் முன்வருவார்கள். மொத்தத்தில் தொழில்துறையினர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாக அமையும் என நம்புகிறோம்'' என்று கூறினார்.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம்(TACT, டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது, ‘‘தொழில் நகரான கோவை சென்னைக்கு அடுத்து தமிழக தொழில் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் பெற்றுள்ள போதிலும் கோவை மாவட்டத்தில் குறுந்தொழில் நிறுவனங்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக குறுந்தொழிற்பேட்டைகள் அமைத்துத் தர வேண்டும் என முன்வைத்து வரும் கோரிக்கையை இன்றுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
சென்னையில் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு என தனியாக தொழில் பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இடவசதி குறைவாக உள்ள இடங்களில் அடுக்குமாடி தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதேபோல் கோவையிலும் அமைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
கோவை மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக தற்போது தொழில்துறையினர் மிகுந்த நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு குறுந்தொழில் நிறுவனங்களுக்கு என குறைந்த வட்டியில் சிறப்பு கடனுதவி திட்டங்களை அறிவிக்க வேண்டும். குறுந்தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு முன்பு திமுக ஆட்சியில் மானியம் வழங்கப்பட்டு வந்தது. மீண்டும் மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறினார்.
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில்கள் சங்கத்தின்(‘COTMA', ‘காட்மா') தலைவர், சிவக்குமார் கூறியதாவது:
‘‘தங்களது முதல் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கும் தமிழக அரசிற்கும், அமைச்சரவைக்கும் மற்றும் மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களுக்கும் ‘காட்மா' சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். குறுந்தொழில் முனைவோர்களின் மிக முக்கிய கோரிக்கையாக, குறுந்தொழில் முனைவோர்களுக்கு, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சலுகைகளோ, கடன் உதவிகளோ தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் பெரும்பாலும் கிடைப்பதில்லை. எனவே, குறுந்தொழில் முனைவோர்களின் இந்த நெருக்கடியை தீர்ப்பதற்காக, ‘‘குறுந்தொழில் வளர்ச்சி வங்கி'' தமிழக அரசால் அமைக்கப்பட்டு குறுந்தொழில் முனைவோர்களுக்கு, குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட வேண்டும். குறுந்தொழில் வளர்ச்சி வங்கி அமைப்பதற்கான நிதி ஆதாரத்திற்கு, தமிழக அரசின் பங்களிப்புடன் குறுந்தொழில் முனைவோர்களின் ஆதரவும், பங்களிப்பும் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.''
‘‘கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் வாடகை கட்டடங்களில் இயங்கும் பெரும்பான்மையான தொழிற்கூடங்கள் இடப் பற்றாக்குறையின் காரணமாக ஊரக மற்றும் மாநகர பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் பரவலாக இயங்கி வருகின்றன. இதனால் அருகாமையில் உள்ள குடியிருப்பு வாசிகளால் ஒலி மாசு, காற்று மாசு போன்ற காரணங்கள் கூறப்பட்டு, தொழில்கள் முடக்கப்படுவதால், தொழில் முனைவோர்கள் தங்களது தொழிலை நடத்த இயலாமல் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, கோவை மாவட்டத்தில் உள்ள அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தியமங்கலம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை மற்றும் பொள்ளாச்சி சாலை போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு கோவையின் தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.''
‘‘தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் 10 HP மற்றும் அதற்கும் குறைவான மின் சக்தி இணைப்பு உள்ள குறுந்தொழிற் கூடங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் பிரிவான 3 B பிரிவில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. எனவே, தமிழகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் 10 HP மற்றும் அதற்கும் குறைவான மின் சக்தி இணைப்புள்ள குறுந்தொழிற் கூடங்களுக்கு 3A-1 பிரிவின்கீழ் மின் இணைப்பு வழங்கி, குறுந்தொழில்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.''
‘‘தற்பொழுது தொழில் முனைவோர்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தால் சராசரியாக 14 சதவிகித வட்டியில் கடனுதவி வழங்கப்பட்டு வருகின்றது. குறுந்தொழில்களின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு, வட்டியைக் குறைத்து, ரூபாய் 50 ஆயிரம் முதல் 75 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி பெறும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு 5 சதவிகித வட்டியில் சொத்துப்பிணையமின்றி, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் வாயிலாக கடனுதவி வழங்கி, குறுந்தொழில்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். மேலும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் வாயிலாக கடன் உதவி பெருகின்ற தொழில் முனைவோர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் அதிகபட்சம் 7 ஆண்டுகள் என்ற அளவிற்கு நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்த கால அவகாசம் வழங்கப்படுவதாலும், மாதத்தவணை தொகை அதிகமாக உள்ளதாலும் கடனைத் திருப்பி செலுத்த தொழில் முனைவோர்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, குறு சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தால் தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படும் கடன்களை திருப்பி செலுத்த 15 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கி, குறு, சிறு தொழிற்கூடங்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.''
‘‘தொழில் முனைவோர்களின் நியாயமான கோரிக்கைகளை தாய் உள்ளத்துடன் பரிசீலித்து வரவிருக்கின்ற நிதி நிலை அறிக்கையில், நிறைவேற்றித்தந்து, தொழில் மற்றும் தொழில் முனைவோர்களை பாதுகாத்திட வேண்டும் என்று ‘காட்மா' சங்கத்தின் சார்பில், தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.'' என்று கூறினார்.
ரயில்வே சப்ளையர்ஸ் சங்கத்தின்(‘RASA', ‘ராசா') தலைவர், சுருளிவேல் கூறியதாவது:

‘‘தமிழக தொழில் வளர்ச்சியில் தொழிற்பேட்டைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அரசு சார்பில் கோவையில் புதிதாக தொழிற்பேட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, தனியார் தொழில் நிறுவனத்தினர் சார்பில் அமைக்கப்பட்டு வரும் தொழிற்பேட்டைகள் விரைவாக செயல்பாட்டுக்கு வருவதற்கு தேவையான உதவிகளை அரசு சார்பில் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். ‘தாய்கோ'(Tamil Nadu Industrial Cooperative Bank TAICO) வங்கி மூலம் தொழில் துறையினருக்கு 4 சதவிகித வட்டியில் கடனுதவி வழங்க வேண்டும்.'' என்று கூறினார்.