கோவை: கோவையில் 4 நாட்களுக்கு கோவில்களில் தரிசனம் செய்ய தடை. ஆற்றோரங்களில் திதி, தர்ப்பனம் செய்யவும் அனுமதி மறுப்பு, ஆட்சியர் சமீரன் அறிவிப்பு.
கோவை: கோவை மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறை அடிப்படைகளிலும், கோவையில் 4 நாட்களுக்கு முக்கிய கோவில்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இம்மாதம் 2ம் தேதி ஆடி கிருத்திகை, 3ம் தேதி ஆடி பெருக்கு பண்டிகை, மற்றும் 8ம் தேதி ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் நடைபெறும் விழாக்களை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அதன்படி, மருதமலையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், பேரூர் அருள்மிகு பட்டிஸ்வர சுவாமி திருக்கோயில், பொள்ளாச்சி ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி அருள்மிகு வன பத்ரகாளியம்மன் திருக்கோயில்களில் 1ம் தேதிமுதல் 3ம் தேதி வரையும் மற்றும் 8ம் தேதியும் நான்கு நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யவும், ஆற்றோரங்களில் திதி மற்றும் தர்ப்பனம் செய்யவும் அனுமதி இல்லை .
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.