கோவை: புதிய பால் பாக்கெட்டுடன் பழைய பால் பாக்கெட்டை இணைத்து விநியோகிக்கும் முகவர்களால் மக்களிடம் ‘ஆவின்' பால் மீதான நம்பிக்கை குறைகிறது. தமிழக அரசு சம்பந்தப்பட்ட முகவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ‘சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர்' கோரிக்கை வைத்துள்ளது.
கோவை: புதிய பால் பாக்கெட்டுடன் பழைய பால் பாக்கெட்டை இணைத்து விநியோகிக்கும் முகவர்களால் மக்களிடம் ‘ஆவின்' பால் மீதான நம்பிக்கை குறைகிறது. தமிழக அரசு சம்பந்தப்பட்ட முகவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ‘சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர்' கோரிக்கை வைத்துள்ளது.
ஆவின் பால் விநியோகத்தில் சில முகவர்கள் செய்யும் தவறுகளால் மக்கள் மத்தியில் நம்பிக்கை குறைந்து கொண்டு வருகிறது என, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ‘சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர்' அமைப்பின் தலைவர், சி.எம். ஜெயராமன் கூறியதாவது, ‘‘தற்போது ஆவின் பால் பாக்கெட்டுகளை மொத்தமாக, குறிப்பாக ஐந்து பாக்கெட்டுக்கு மேல் வாங்குபவர்களிடமிருந்து புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. அதாவது சில புதிய பால் பாக்கெட்டுகளுடன் விற்றுத் தீராத பழைய பால் பாக்கெட்டுகளையும் சில முகவர்கள் மொத்தமாக பால் வாங்குபவர்களுக்கு விற்று விடுவதாகத் தெரிகிறது.
நுகர்வோர்களுக்கு அது எந்த தினத்தில் அடைக்கப்பட்ட பால் என்று தெரியாததால் அனைத்தையும் ஒன்றாக வாங்கி அவற்றை காய்ச்சும் பொழுது மொத்தமாக கெட்டுப் போவதால் பெருத்த நஷ்டம் ஏற்படுவதுடன் அவர்கள் எந்த நோக்கத்திற்காக பால் வாங்கினார்களோ அது முற்றிலும் வீணாகிறது. இது ஆவின் நிர்வாகத்தின் கவனத்திற்கு அல்லது கள அலுவலர்களின் கவனத்திற்கு தெரியாமல் சில முகவர்களால் செய்யப்படுகின்ற அநீதியான செயல். இதனால் ஆவின் பால் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
இப்பிரச்சனை குறித்து பால்வளத் துறை அமைச்சருக்கு எங்கள் அமைப்பு சார்பில் கடிதம் அனுப்பியுள்ளோம். அதில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண சில யோசனைகளையும் வழங்கியுள்ளோம்.
‘‘1. ஆவின் பால் பாக்கெட்டுகள் மீது ஒவ்வொரு நாளும் ஒரு வண்ண குறியீடு அச்சிடலாம். உதாரணமாக திங்கட்கிழமை அடைக்கப்பட்ட பால் பாக்கெட் மீது நீலவண்ண புள்ளியும், செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்ட பாக்கெட் மீது பச்சைவண்ண புள்ளியும், புதன்கிழமை அடைக்கப்பட்ட பாக்கெட் மீது மஞ்சள் வண்ண புள்ளியும் போன்ற குறியீடுகளை ஒவ்வொரு நாட்களுக்கும் பாக்கெட்டுகளின் மீது அச்சிடலாம்.
2. தற்போது ஆவின் பால் பொருட்கள் பல, ஆவினுக்கு என்றே உருவாக்கப்பட்ட தனிப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. இந்தக் கடைகளில் ஆவின் பொருட்கள் தவிர மற்ற பொருட்களும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இங்கு போலியான ஆவின் பாலும், சில தனியார் பாலும் விற்கப்படுகின்றன. இவற்றை தவிர்க்க ஆவின் பால் கடைகளில் முற்றிலுமாக ஆவின் பொருட்கள் மட்டும் விற்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணமாக கோவையில் சாய்பாபா காலனி காவல் நிலையம் அருகே மற்றும் உப்பிலிபாளையம் ஆகிய இடங்களில் உள்ள ஆவின் கடைகளில் அனைத்து தின்பண்டங்களும் பால் பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
3. சில ஆவின் விற்பனையகங்களில் பாக்கெட்டுகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலையை விட 50 காசு முதல் ஒரு ரூபாய் வரை அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 500 பாக்கெட்டுகள் விற்பனையாகும் இடத்தில் மிகவும் சுலபமாக கணக்கில் வராமல் விற்பனையாளர் ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் பணம் ஈட்ட வழிவகை ஏற்பட்டு விடுகிறது. இதுபோன்ற தவறு செய்யும் விற்பனையாளர்கள் மீது அரசு கருணை காட்டாமல் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் பெரும்பாலானோர் பூத்களில் இருந்து நேரடியாக பாலை பெற்றுச் செல்கின்றனர். எனவே, இதை கருத்தில் கொண்டு மக்கள் கூட்டத்தை குறைக்க அதிக எண்ணிக்கையில் பால் பூத்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. ‘சலுகை விலையில் பால் பெற மாதந்திர டிஜிட்டல் கார்டுகள்’ வழங்கபடுகின்றன. இதேபோல், 15 நாட்கள், 7 நாட்கள் என பல பிரிவுகளில் டிஜிட்டல் கார்டுகளை வழங்கலாம். டேங்கர்களில் பாலை கொண்டு செல்லும் போது தண்ணீரைச் சேர்த்து கலப்படம் செய்வதாக கூறப்படும் புகார்கள் குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிட வேண்டும்.
தமிழக அரசு மேற்குறிப்பிட்டுள்ள புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஆவின் நிர்வாகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை அதிகரிக்கும்'' இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.