கோவை: கோவை - கேரளா எல்லை வாளையாறு வட்டார போக்குவரத்து சோதனை சாவடியில் கேரளா லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கணக்கில் வராத ரூ.1.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கோவை - கேரளா எல்லை வாளையாறு வட்டார போக்குவரத்து சோதனை சாவடியில் கேரளா லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கணக்கில் வராத ரூ.1.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை - கேரளா எல்லையான வாளையாறு கேரளா பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் கோவை வழியாகச் செல்லும் வாகனங்களின் ஆவணங்கள் சரிபார்த்து அனுப்பப்படும். குறிப்பாக அதிகளவு இயந்திரங்கள், காய்கறி, முட்டை லோடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் செல்வது வழக்கம்.
இந்நிலையில், கோவை வழியாக கேரளா செல்லும் வாகன ஓட்டிகளிடமிருந்து ஆவணம் முறையாக இருந்தாலும், லஞ்சம் வாங்கப்படுவதாக கேரளா லஞ்ச ஒழிப்பு ஊழல் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் அங்கு கேரள லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வாகன ஓட்டிகளிடமிருந்து பணம் பெற்று கொடுத்த தமிழகத்தைச் சேர்ந்த மோகனசுந்தரம் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். இதில் அரசுக்கு ரூ.2.50 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதும், கணக்கில் வராத ரூ.1.75 லட்சம் பணம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதிகாலை 4 மணியளவில் சோதனை நிறைவடைந்த நிலையில் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் மோகனசுந்தரத்தை கைது செய்தனர்.
மேலும், வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் பணியில் இருந்த அரசு ஊழியர்களுக்கு சம்மன் வழங்கிச் சென்றனர்.