கோவை: ஆடி மாதம் துவங்கி உள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. தினசரி மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு காற்றாலைகள் பங்களிக்க துவங்கியுள்ளன.
கோவை: ஆடி மாதம் துவங்கி உள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. தினசரி மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு காற்றாலைகள் பங்களிக்க துவங்கியுள்ளன.
அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு உள்ளன. ஆண்டுதோறும் மே கடைசியில் துவங்கி செப்டம்பர் வரை காற்றாலை மின் உற்பத்தி சீசன் ஆகும்.
இந்த ஆண்டு முன்கூட்டியே ஏப்ரல் முதல் வாரத்தில் காற்றாலை மின் உற்பத்தி சீசன் துவங்கியது. தற்போது ஆடி மாதம் துவங்கியுள்ள நிலையில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் தினசரி உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(IWPA) தலைவர், கஸ்தூரிரங்கையன் கூறியதாவது:
கடந்த ஆண்டு சீசனில் 10,000 மில்லியன் யூனிட் காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இவ்வாண்டு சீசன் ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கியது. 'ஆடி' மாதம் காற்றாலை உற்பத்தியில் 'பீக் சீசன்' ஆகும். தற்போது காற்றின் வேகம் அதிகம் காணப்படுவதால் தினமும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவும் கணிசமாக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக நேற்றையதினம்(July 21) புதன்கிழமை, தமிழகத்தின் மொத்த மின் பயன்பாடு 309 மில்லியன் யூனிட். இதில் 101 மில்லியன் யூனிட் காற்றாலை மின்சாரம் பங்களிப்பு செய்துள்ளது.
தமிழக மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு காற்றாலை மின்சாரம் பங்களிக்க துவங்கி உள்ளன. எதிர் வரும் நாட்களில் பங்களிப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது."
இவ்வாறு அவர் கூறினார்.