கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளிக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் ஆட்களை நியமிக்கக்கோரி செவிலியர்கள் மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளிக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் ஆட்களை நியமிக்கக்கோரி செவிலியர்கள் மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளையில், அரசு மருத்துவமனைகளில் ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் கூறப்படுகிறது. கோவை அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான செவிலியர்கள் கொரோனா வார்டில் பணிபுரிவதால், இதர நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டுகளில் போதுமான எண்ணிக்கையில் செவிலியர்கள் இல்லாததால், தற்போது பணியாற்றி வரும் செவிலியர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
எனவே, கூடுதல் செவிலியர்களை நியமனம் செய்து பற்றாக்குறையைப் போக்க வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள செவிலியர்கள் குவார்டர்ஸ் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர்களை நியமனம் செய்து தற்போது பணிபுரியும் செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்கும்படி முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த மருத்துவமனை முதல்வரிடம் அவர்களது கோரிக்கையை முன்வைத்தனர். தங்களது கோரிக்கைகள் அரசு கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று முதல்வர் உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.