கோவை: அன்னூரில் உள்ள ஜெயபாரதி அக்ரோ புட்ஸ் நிறுவனம் ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை: அன்னூரில் உள்ள ஜெயபாரதி அக்ரோ புட்ஸ் நிறுவனம் ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்டம் அன்னூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;
“அன்னூரை சுற்றியுள்ள சிறிய கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்து விளை பொருட்களை கொள்முதல் செய்ய ஜெயபாரதி அக்ரோ புட்ஸ் நிறுவனம் முன்வந்தது. விளைபொருட்களுக்கான தொகையில் 20 சதவிகிதத்தை உடனடியாகவும், மீதத் தொகை காசோலை மூலமாகவும் தருவதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தரராசு உறுதி அளித்தார்.
அதன்படி அவர் கொடுத்த காசோலைகளுக்கு பணம் செலுத்தவில்லை என்று வங்கிகளில் இருந்து விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து ஜெயபாரதி அக்ரோ புட்ஸ் நிறுவனத்தின் விவசாயிகள் கேட்டனர்.
ஆனால், முறையான பதில் எதுவும் தரப்படவில்லை. 6 மாத காலமாக விவசாயிகளுக்கு ரூ.40 லட்சத்துக்கும் அதிகமாக நிலுவைத் தொகையை தராமல் சுந்தரராசு ஏமாற்றி வருகிறார். இதற்கு முன்னர் சுந்தரராசு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வழக்கு இதுவரை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்படாமல் இருக்கிறது. ஜெயபாரதி அக்ரோ புட்ஸ் நிறுவனத்தை நம்பி ஏமாற்றமடைந்த விவசாயிகள் கடன் நெருக்கடியில், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
எனவே ஜெயபாரதி அக்ரோபுட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தரராசு மீது விரைந்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.” இவ்வாறு விவசாயிகள் புகாரில் தெரிவித்துள்ளனர்