கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் பகுதி சங்கம் வீதியில் நேற்றிரவு இந்து முன்னணியின் உக்கடம் நகர துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் என்பவர் மர்ம நபர்கள் சிலரால் தாக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் பகுதி சங்கம் வீதியில் நேற்றிரவு இந்து முன்னணியின் உக்கடம் நகர துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் என்பவர் மர்ம நபர்கள் சிலரால் தாக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று ராமகிருஷ்ணனை நலம் விசாரித்தார்.
பின்னர், பத்திரிக்கையாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: நேற்று நடந்த தாக்குதலை போலவே சில நாட்களுக்கு முன்பு பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நேற்று நடந்த தாக்குதலுக்கு இதுவரை யாரையும் காவல்துறையினர் கைது செய்யவில்லை. தேர்தலுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டவர் மீது தாக்குதல் நடந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளனர். இது போன்ற சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும். இதனை தடுப்பதற்கு உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதனை தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்து முன்னணியினர் கூட்டமாக திரண்டனர்.
பதற்ற சூழ்நிலையை தவிர்க்கும் விதமாக காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.
பின்னர், அங்கு வந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது:
உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்த போது, பெரிய கலவரத்தை உருவாக்க பலர் திட்டமிட்டனர். அதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.
இது போன்ற தொடர் சம்பவங்களை காவல்துறையினர் கண்டிக்காவிட்டால் அவற்றை ஊக்கப்படுத்தும் விதமாக அது அமைந்துவிடும். நேற்றைய சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகும். காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் தொடர்ந்து சாதி மத கலவரங்களை நிகழ்த்த பலர் திட்டமிட்டுள்ளனர். இதில் சீனா, பாகிஸ்தான் போன்ற பல வெளிநாடுகளின் சதிகளும் உள்ளன. உளவுத்துறையினர் கூர்ந்து கண்காணித்து அவற்றை முன்கூட்டியே தடுக்க வேண்டும்.
இவ்வாறு பேசிய அவர், இந்து முன்னணி இயக்கத்தை சேர்ந்த தொண்டர்களுடன் கூட்டமாக சென்று கோவை மாவட்ட கமிஷனரிடம் தாக்குதல் சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார்.