கோவை: கோவை போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில்், ஆட்டோ டிரைவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில், ஆட்டோ டிரைவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சுந்தராபுரம் அடுத்த பிள்ளையார்புரம் காந்தி நகரை சேர்ந்தவர் சவுக்கத்அலி (32). இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். நேற்று மாலை சவுக்கத் அலி வெள்ளலூரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் மற்றொரு ஆட்டோ டிரைவர் சதீஷ் என்பவருடன் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீசார், சவுக்கத் அலி மற்றும் அவரின் ஆட்டோவை பறிமுதல் செய்து ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவர் மீது பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். மேலும், சவுக்கத்அலி குடிபோதையில் இருந்ததால் போலீசார் ஆட்டோவை இன்று வந்து அபராதத் தொகையைக் கட்டி எடுத்துக் கொள்ளுமாறு கூறி உள்ளனர்.
இதையடுத்து, இரவு 8 மணி அளவில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே சென்ற சவுக்கத் அலி, கையில் இருந்த பெட்ரோல்ல் கேனுடன் மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். பின்னர், பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீயை பற்ற வைத்து போலீஸ் ஸ்டேஷனுக்குள் அலறிக்கொண்டு வலியில் அங்குமிங்கும் ஓடியுள்ளார்.
அப்போது, பணியில் இருந்த போலீஸ்காரர் அவரை மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அவருக்கு 60 சதவீத தீக்காயங்கள் இருந்ததால் சவுக்கத்அலி, வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சம்பவம் குறித்து பணியில் இருந்த போலீசாரிடம் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் வளாகத்தில் ஆட்டோ டிரைவர் தீக்குளித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.