கோவை: கோவை மாவட்டத்தில் தென்னை மரங்களில் மீண்டும் வெள்ளை ஈ தாக்குதல் வேகமாக பரவி வருவதால் இதனை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் தென்னை மரங்களில் மீண்டும் வெள்ளை ஈ தாக்குதல் வேகமாக பரவி வருவதால் இதனை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் 92 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி உள்ளது. குறிப்பாக பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, தொண்டாமுத்தூர் வட்டாரங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தென்னை சாகுபடியை ஆதாரமாகக் கொண்டு கொப்பரை, தென்னை நார் மற்றும் கயிறு உள்பட பல்வேறு மதிப்புக்கூட்டு பொருள்கள் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல கோடி வரை வர்த்தகம் ஈட்டப்படுகிறது.
கடந்த 2016ம் ஆண்டு தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஆனைமலை வட்டாரத்தில் பரவ துவங்கிய வெள்ளை ஈ தாக்குதல் மாவட்டம் முழுவதும் வேகமாக பரவி பெரும் இழப்பை விவசாயிகள் சந்தித்தனர்.
இதனால் தென்னை மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, விவசாயிகளும் மகசூல் இழப்பும் ஏற்பட்டது. 2 ஆண்டு காலம் வரையிலும் கடும் சேதத்தை ஏற்படுத்திய வெள்ளை ஈ பாதிப்பு கடந்தாண்டு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வட்டாரங்களில் மீண்டும் வெள்ளை ஈ தாக்குதல் வேகமாக பரவி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு வழிமுறைகளை பின்பற்றியும் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். பெரும் சேதத்தை ஏற்படுத்துவதற்கு முன் உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது :
கோவை மாவட்ட விவசாயத்தில் பிரதான விவசாயமாக தென்னை விவசாயம் உள்ளது. கெயில் பைப் லைன் திட்டம், உயர்மின் கோபுரம் திட்டம், சாலை விரிவாக்க திட்டம், வறட்சி, வெள்ளை ஈ தாக்குதல் என தென்னை விவசாயம் கடந்த சில ஆண்டுகளாக பெரிய பாதிப்புகளை சந்தித்து வருகிறது. வறட்சி காரணமாக மட்டும் கடந்த சில ஆண்டுகளில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் காய்ந்து அழிந்துள்ளன. வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதனால் தென்னை மகசூல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தரப்பட வேண்டும். தென்னை மரம் ஒன்று ரூ.35 ஆயிரம் வரை இழப்பீடு தர வேண்டும். குறிப்பாக வெள்ளை ஈ தாக்குதல்கள் குட்டை, நெட்டை ஆகிய வீரிய ஒட்டுரக மரங்களில் தான் அதிகளவில் காணப்படுகிறது.
ஆகவே, கேரளாவில் உள்ளது போல் தமிழகத்தில் கோவை மாவட்டத்தை மையமாக வைத்து தென்னை நலவாரியம் அமைக்கப்பட வேண்டும். தென்னை விவசாயத்தை பொறுத்தவரையில் அதில் இருந்து தேங்காய், இளநீர், மஞ்சில் இருந்து கயிறு தயாரிப்பு, தேங்காய் எண்ணெய் தயாரிப்பு போன்ற பல்வேறு மதிப்புக்கூட்டு பொருட்கள் என பல வகையில் விவசாயிகள் பயன்பெறுகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவது போல் தென்னைக்கு வெள்ளை ஈ தாக்குதல் பரவி வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு கூட பெரும் அளவு தேங்காய்கள் கோவையில் இருந்து தான் செல்கிறது.
வறட்சி காலத்தில் தென்னை விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கின்றனர். கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வறட்சி காரணமாக மட்டும் பல ஆயிரம் தென்னை மரங்கள் கருகி போகின்றன. வறட்சிகளை தாங்கி வளரக்கூடிய அளவிற்கு தென்னை கன்றுகளை உருவாக்கி தர வேண்டும். இதனால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். இவ்வாறு சு.பழனிசாமி கூறினார்.
கிணத்துக்கடவு வட்டார விவசாயிகள் கூறியதாவது:
கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வட்டாரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. தென்னை மரங்களின் ஓலைகளில் ஒட்டிக்கொள்ளும் வெள்ளை ஈக்கள் அதன் சாறினை உறிஞ்சி ஒளிச்சேர்க்கை நடைபெறுவதை தடை செய்கிறது. பின் ஓலைகளின் மேல்பகுதியில் கருப்பு நிறத்தில் பூஞ்சாணம் போல் படர்கிறது. இதனால் மரங்களுக்குத் தேவையான உணவு கிடைக்காமல் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இதனால் மரங்களின் உறுதித்தன்மை இழந்து அழியும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. 40 ஆண்டு காலம் வரை மகசூல் கொடுக்கக்கூடிய மரங்கள் நோய் பாதிப்பினால் அழிவதால், விவசாயிளுக்கு பல லட்சம் வரையிலும் வருவாய் இழப்பு ஏற்படும். கிணத்துக்கடவு, பொள்ளாச்சிப் பகுதிகளில் 40 சதவீத மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதே நிலை நீடித்தால் தேங்காய் விலை உயர்ந்து கொண்டே தான் போகும். இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.
இது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது: பருவநிலை மாற்றத்தால் தான் வெள்ளை ஈ தாக்குதல்கள் ஏற்படுகிறது. கடந்த சில தினங்களாக கோவை மாவட்டத்தில் வெயிலும், மழையும் என காலநிலை மாறுவதால் வெள்ளை ஈ மீண்டும் பரவி வருகிறது. கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய வட்டாரங்களில் காலநிலை மாற்றத்தாலே வெள்ளை ஈ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மரங்கள் அழிவதற்கு வாய்ப்பில்லை. இயற்கை வழிமுறைகளால் மட்டுமே முழுமையாக கட்டுப்படுத்த முடியும். தொடர் மழை பெய்தாலும் வெள்ளை ஈ தாக்குதல் குறையும் வாய்ப்புள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பூச்சியியல் துறை விஞ்ஞானிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.