கோவை: முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை மோடி திட்டம் எனக்கூறி பாஜகவினர் வசூலித்த தொகையை திரும்பபெற்று தரக்கோரி திமுக இளைஞரணியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை மோடி திட்டம் எனக்கூறி பாஜகவினர் வசூலித்த தொகையை திரும்பபெற்று தரக்கோரி திமுக இளைஞரணியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை வட்டத்திற்கு உட்பட்ட திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் ரேசன் கடை எண் 56 செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் மோடியின் ரூ.5 லட்சம் காப்பீட்டு திட்டத்தில் இணைப்பதாக கூறி தலா ரூ.50 என வசூலித்து வருகின்றனர். இதுவரை 200 பேரிடம் ரூ.50 என 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த இத்திட்டத்தை ஜெயலலிதா முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் என பெயர் மாற்றினார். மேலும் இத்திட்டத்திற்காக எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படக்கூடாது என காப்பீட்டு அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக திருமலையாம்பாளையம் பகுதியிலுள்ள 15 வார்டுகளில் மோடி திட்டம் எனக்கூறி பாஜகவினர் வசூலில் ஈடுபட்டு வருவதை தடுக்கவும், அவர்கள் வசூல் செய்த தொகையை திரும்ப வழங்க வலியுறுத்தி திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.