கோவை: 230 கோடி வளர்ச்சி பணி என்ற பெயரில், நொய்யல் ஆற்றை காரணம் காட்டி, குளக்கரைகளில் கான்கிரீட்களை கொட்டி, நொய்யல் ஆற்றின் உயிர்ச்சூழலைச் சிதைத்து, மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக நா.கார்த்திக் எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை: 230 கோடி வளர்ச்சி பணி என்ற பெயரில், நொய்யல் ஆற்றை காரணம் காட்டி, குளக்கரைகளில் கான்கிரீட்களை கொட்டி, நொய்யல் ஆற்றின் உயிர்ச்சூழலைச் சிதைத்து, மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக நா.கார்த்திக் எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது :-
நொய்யல் ஆற்றை விரிவாக்குதல், புதுப்பித்தல், புனரமைத்தல் என்ற பெயரில் பொதுப்பணித்துறையும், குளங்களில் கோவை மாநகராட்சி நிர்வாகமும் சில பணிகளை செய்து வருகிறது.
பொதுப்பணித்துறை செய்யவிருக்கும் பணிகள் குறித்து, ஒரு கட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இருந்தே தெரிகிறது திட்டம் எங்கிருந்து உருவானது என்று. எந்த ஒரு பெரிய ஆய்வும், போதிய திட்டமிடலும் இல்லாமல் தேர்தலையும், தேர்தல்களுக்கான செலவுகளையும் கருத்தில் கொண்டு, 230 கோடி வளர்ச்சி பணி என்ற பெயரில் நொய்யல் ஆற்றை காரணம் காட்டி அதன் உயிர்ச்சூழலைச் சிதைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
ஒரு ஆற்றின் நீர் ஆதாரங்களை புதுப்பிக்க அதன் நீரோடைகளை மீட்பது, தடுப்பணைகளை அமைத்தல், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரித்தல், நில அளவை செய்து அதன் அறுதியினை நிர்ணயித்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், குப்பைகள் மற்றும் மாசுக்களை தடுத்தல், குளங்களின் கொள்ளளவை அதிகரிக்க தூர் வாருதல் போன்ற எந்த ஒரு முறையான பணியும் இல்லாது, உலகத்தில் எந்தவொரு ஆறும் இதுபோன்ற ஒரு முறையில் புனரமைக்கப்பட்டதில்லை.
ஏரி, குளங்களை ஆழப்படுத்தாமல், ஏரிகளின் கரைகளை மட்டும் பலப்படுத்துகிறேன் என்ற பெயரில், நம் முன்னோர்கள் கட்டமைத்த குளங்களின் உயிர்ச்சூழலை கெடுக்கும் விதமாக, மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் இல்லாது, முறைகேடுகள் செய்வதற்கு ஏற்ற வகையில், குளக்கரைகளில் கான்கிரீட்களை கொட்டி மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள். இவர்கள் ஆட்சியில் மக்கள் மட்டுமல்ல, பல்லுயிரும் பாழாய் போவதற்கு பல திட்டங்கள் உருவாக்கப் படுகின்றன.
உதாரணத்திற்கு, பெரிய குளத்தில் நீர் தேங்கும் பரப்பளவின் ஒரு பகுதியில், ஓலை குடிசையில் இருந்த மக்களை, நீர்நிலைகளை காக்கிறோம் என்ற பெயரில் அவர்களை துரத்தி விட்டு நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து, கான்க்ரீட் கலவைகளை உருவாக்கும் இயந்திரங்கள் மற்றும் கட்டுமானத்திற்கு தேவையான சேமிப்பு கிடங்கு அமைத்து, சிமெண்ட் பாலை நிலத்தில் ஊற்றி, நீர் நிலத்திற்குள் செல்லாது தடுக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
“குளக்கரைகளை மேம்படுத்தும்போது, குளங்களின் அளவை குறைக்க கூடாது” என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, நீதிமன்றத்தையும் மீறி, உக்கடம் பெரியகுளத்தில், நீர்தேங்கும் பரப்பளவை குறைக்கும் விதமாக உள்ளாட்சித் துறையின் மூலம் கான்க்ரீட் கலவைகளை கொண்டு சுவர் எழுப்பி, தார் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. நீர்தேங்கும் பரப்பளவை சுருக்கியும், அங்குள்ள பழமையான மரங்களை அகற்றியும், மற்றும் பேரூர் சொட்டையாண்டி குளத்திற்கும் , பெரியகுளத்திற்கும் இடையே உள்ள தாய் வாய்க்காலை குளறுபடி செய்து அதனுடைய அமைப்பையே சிதைத்து வருகின்றனர். நொய்யல் நீர் வழித்தடங்களில் உள்ள எந்த குளங்களையும் தூர் வாராமல் நீர்நிலைகளை எவ்வாறு காக்கமுடியும்?
இத்திட்டத்தின் முழு விவரம் குறித்து விவசாயிகள், எதிர்க்கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள், ஊடக நண்பர்கள் இவர்கள் யாருக்கும் தெரிவிக்காமல், முழு திட்ட அறிக்கையை பொது வெளியில் எங்கும் வெளியிடாமலும், நீர்நிலைகளை பல ஆண்டுகளாக பாதுகாக்கும் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பயனாளர்களை வைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலேயே அதிகாரத்தைக் கொண்டு இத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர்.
மேலும், இந்த ஒப்பந்தப்பணிகளை, தங்களுக்கு தேவையான சொந்த கட்சிக்காரர்கள் மற்றும் பினாமிகள் மூலமும், தங்களுக்கு ஒத்துவராத அதிகாரிகளை இட மாறுதல் செய்தும், நொய்யல் ஆற்றை கவனிக்காது ஆளுங்கட்சியினரை மட்டுமே கவனிக்க தங்களுக்கு சாதகமான வேறு பகுதியில் பணியாற்றும் அதிகாரிகளை, இத்திட்டத்தில் புகுத்தியும் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
ஒரு பக்கம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் “செத்த கிளிக்கு சிங்காரம் செய்வது போல” அழுக்குத் தண்ணீர் தேங்கும் இடத்தில், வழுக்குத் தரை அமைத்து ஒளி விளக்கு அமைத்து உயிர்கொடுக்க முயல்கின்றனர். காவேரியின் இளைய மகள் என்று போற்றப்படும் நொய்யல் ஆற்றையும், அதன் உயிர்ச் சூழலையும் கெடுக்கும் இவர்களுக்கு இயற்கை அன்னை கண்டிப்பாக பாடம் புகட்டுவாள்.
தற்போது நடைபெறும் திட்டப் பணிகளில், மக்களின் வரிப் பணத்தை வீணாக்கி, மக்களுக்கும், நீருக்கும், நிலத்துக்கும் கேடு விளைவிக்கும் செயலை கண்டு இனியும் பொறுத்திருக்க முடியாது. இதனை இனியும் சரி செய்யாது இருந்தால், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நீதித்துறையை அணுகி சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்களை திரட்டி அறவழி போராட்டத்தை நடத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.