அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை மீட்கும் வகையில் பாஜக மிகப்பெரிய போராட்டம் நடத்தும் என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை பீளமேட்டில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் பொதுநல விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், கரூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நான்கு கோவில்களின் 3,085 ஏக்கர் நிலம் தொடர்பாக அவசரமாக பட்டா வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் பரிந்துரையின் அடிப்படையில் ஒரே நாளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எந்த அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டன என்பது குறித்து சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், முழுமையான ஆய்வுக்குப் பிறகு கோவில் சொத்துகளை மீட்கும் வகையில் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

கரூரில் நடைபெற்ற சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வாரிசு அடிப்படையில் பணி வழங்கியிருப்பது குறித்து கேள்வி எழுப்பிய அவர், வேலை வழங்கியதை எதிர்க்கவில்லை என்றாலும், ஏற்கனவே பல்வேறு துறைகளில் பணிக்காக காத்திருக்கும் வாரிசுகள் மற்றும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றார். முன்னுரிமை மற்றும் மூப்பு அடிப்படையில் பணி வழங்கியிருந்தால் அது சரியான நடைமுறையாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கோவில் நிலங்களை தனியாருக்கு வழங்குவதற்கான தகுதி அரசுக்கு என்ன உள்ளது என்றும் கேள்வி எழுப்பிய அவர், அரசாணை மற்றும் பயனாளிகளின் விவரங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகே விரிவாக கருத்து தெரிவிப்பேன் என்றார்.

“பணம் கொடுப்பது மட்டுமே லஞ்சம் அல்ல; தனக்கு வேண்டியவர்களுக்கு செய்யப்படும் உதவியும் ஒரு வகையில் லஞ்சம்தான்” என்று கூறிய அவர், கோவில் நிலங்கள் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட விதம் குறித்தும் விமர்சித்தார்.

கரூரில் நடைபெற்ற முதல்வரின் நிகழ்ச்சியை அரசு பள்ளிகளில் ஒளிபரப்பியதாக எழுந்துள்ள கேள்விக்கு பதிலளித்த அவர், இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்ததில்லை என்றும், பள்ளி மாணவர்களுக்கு அரசியல் நிகழ்ச்சிகளை காட்டுவது தவறான முன்னுதாரணம் என்றும் தெரிவித்தார்.

முதல்வர் வருகையையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதும், அவரது நிகழ்ச்சிகளை பள்ளிகளில் ஒளிபரப்புவதும் மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் செயலாகும் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கான உர மானியம் குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், மத்திய அரசு யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்களை அதிக விலைக்கு கொள்முதல் செய்து மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருவதாக கூறினார். இந்த மானியத் திட்டத்தில் மாநில அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், உரங்கள் முறைகேடாக வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாக கூறப்படும் தகவல்கள் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகே கருத்து தெரிவிப்பேன் என்றார்.

அயோத்தி ராமர் கோவில் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், எந்த இடத்தில் தவறு நடந்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியதுதான் என்றும், இறுதி அறிக்கை வெளியான பிறகே அந்த விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவிப்பேன் என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், அவரது அரசியல் நிலைப்பாடுகள் தொடர்ந்து மாறி வருவதாக விமர்சித்தார். திமுக கூட்டணியில் இருந்தபோது ஒரு நிலைப்பாடு, தற்போது வேறு நிலைப்பாடு என பேசி வருவதாக கூறிய அவர், 2029 தேர்தலில் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்கத் தயாராகி வருவது தெளிவாக தெரிகிறது என்றும், "பாஜகவை பார்த்து அனைவரும் பயப்படுகின்றனர்" என்றும் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...