கோவை: சமூக வலைதளங்களில் பெரியார் குறித்து அவதூறாக பதிவிட்ட பா.ஜ.க உறுப்பினர் நந்தகுமாரை அன்னூர் அருகே போலீசார் கைது செய்தனர்.
கோவை: சமூக வலைதளங்களில் பெரியாரை இழிவுபடுத்திய பா.ஜ.க உறுப்பினர் நந்தகுமாரை அன்னூர் அருகே கணேசபுரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் அன்னூரில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மற்றும் கந்தசஷ்டி குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக எழுந்த புகாரின் பேரில், பதிவிட்ட இளைஞர் சண்முகநாதன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
அதேபோல, பாஜகவைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர், பெரியார் குறித்து அவதூறாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக கூறி நந்தகுமாரை கைது செய்யக் கோரி அன்னூர் காவல்நிலையம் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதில் நந்தகுமார் மீது வழக்குப்பதிவு மட்டும் செய்யப்பட்டு, கைது செய்யப்படாததை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் குடும்பத்துடன் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் பெரியாரை இழிவுபடுத்திய பா.ஜ.க உறுப்பினர் நந்தகுமார் மீது வழக்குப் பதிவு செய்திருந்த அன்னூர் போலீசார் கடந்த ஒருவார காலமாக அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த நந்தகுமாரை நேற்று அன்னூர் அருகே உள்ள கணேசபுரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வைத்து காவல்துறை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் நந்தகுமாரை ஆஜர்படுத்திய போலீசார், அவரை பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.