கோவை: கோவை ஆலாந்துறை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்கிரி ஏழாவது மலையில் இறைவன் அழைத்ததாக கடிதம் எழுதி, இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை ஆலாந்துறை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்கிரி ஏழாவது மலையில் இறைவன் அழைத்ததாக கடிதம் எழுதி, இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாக உள்ளது. இந்த மலைக்கு ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து இறை வழிபடுகின்றனர். இந்நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு தடையால் மலைக்குச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. ஆனால், இளைஞர் ஒருவர் அந்த ஏழாவது மலைக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் மகாதேவன். இவர் ஆண்டு தோறும் ஆடி மாதம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று இறை வழிபடுவது வழக்கம். இந்த நிலையில், மகாதேவன் தனது வீட்டில் மலைக்கு செல்வதாக தெரிவித்து விட்டு சுமார் எட்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். வந்த அவர் மீண்டும் வீட்டாரை தொடர்பு கொள்ளவில்லை.

இந்த நிலையில், சந்தேகமடைந்த மகாதேவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவரது செல்போன் எண் மூலம் நடத்திய விசாரணையில் அவரது அலைவரிசை கடைசியாக இருட்டு பள்ளத்தில் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆலந்துறை போலீசார் வனத்துறை உதவியுடன் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மகாதேவன் வெள்ளியங்கிரி ஏழாவது மலையில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் அவரது அருகே இருந்த கடிதத்தில் தன்னை இறைவன் அழைத்துள்ளதாகவும், எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை எனவும் மகாதேவனின் கையெழுத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து போலீசார் மற்றும் வனத்துறையினர் ஏழாவது மலையில் இருந்து மகாதேவனின் பிரேதத்தை கீழே கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆடி காற்றாலும், பெய்து வரும் மழையாலும் அவரது பிரேதத்தை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்டுள்ள இளைஞர் 2018ம் ஆண்டில் காவலர் தேர்வு எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.