கோவை: கோவையில் கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை எனில் மத்திய அரசு மூலம் மாநில அரசை நிர்பந்திப்போம் என பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை: கோவையில் கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை எனில் மத்திய அரசு மூலம் மாநில அரசை நிர்பந்திப்போம் என பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை காந்திபுரம் பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, கோவையில் கடந்த காலத்தில் நடந்த கொடூரம் மீண்டும் நடைபெறுவதை சமீபத்தில் நடந்த அறிகுறிகள் காட்டுகிறது எனவும் கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதாகவும் இது கண்டனத்திற்குரியது என்றார்.
கோவில் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் காவல் துறையினரை சுதந்திரமாக இந்த அரசு செயல்பட விடவில்லை எனவும் 3 இடங்களில் கோவில்களில் அம்மன் சேலை எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த செயல்களை மனநிலை பாதிக்கப்பட்டவர் செய்தார் என கூறுவது ஏற்கும்படி இல்லை என தெரிவித்தார்.
திமுக கடந்த காலங்களில் செய்த அதே தவறை தான் அதிமுகவும் செய்கின்றது எனவும் இந்துக்களுக்கு எதிரான செயல்களை திராவிட இயக்கங்கள் கண்டிப்பதில்லை என குற்றம்சாட்டிய அவர், கோவைக்கு இஸ்லாமிய பயங்கரவாதம், தனி தமிழ் நக்சல் இயக்கங்கள் ஆகிய இரண்டு ஆபத்துகள் இருக்கின்றன எனவும் இதை ஆரம்பத்திலே கிள்ளி எறிய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், தமிழகத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் வீடுகள் முதலான இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை இதுவரை கண்டுபிடிக்க வில்லை எனவும் நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்கக் கூடாது என்றார். மாநில அரசு கோவில் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியை நாட தமிழக பா.ஜ.க தயங்காது எனவும் தெரிவித்தார்.
பா.ஜ.க தேர்தலை பற்றி கவலைப்படாது என தெரிவித்த அவர், 4 இடங்களில் கோவில்களை தாக்கியது மனநிலை பாதிக்கப்பட்டவர் என காவல்துறை சொல்வது ஏற்கும் படியாக இல்லை என்று தெரிவித்தார். மேலும் இது புனைக்கப்பட்ட கதையாக இருப்பதாக கூறியவர், கோவில்களை சேதப்படுத்தியவர்களை ஏவி விட்டவர் யார் என்பதை காவல் துறை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
முருகன் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் அமைதி காப்பதால் திராவிட இயக்கங்களுக்கு எதிராக மக்கள் திரள வேண்டிய சூழல் இருக்கின்றது என கூறிய அவர், கோவில்கள் தாக்கப்படுவதை ஸ்டாலின் கண்டிக்கின்றார் என்றால் இந்துக்களின் ஓட்டின் முக்கியத்துவம் குறித்து தற்போது தெரிந்துள்ளார் எனவும் இந்த விவகாரத்தில் அதிமுக விழித்துக் கொள்ளாவிடில் மிகப்பெரிய தோல்வியை தழுவும் என்று கூறினார்.
அதேபோல, கோவில்கள் தாக்கப்பட்டதை கண்டிக்கும் ஸ்டாலினின் மனநிலை உண்மையானதா என்பதை அறிய காத்திருக்கின்றோம் என தெரிவித்த அவர், தமிழக அரசுக்கு இன்று முதல் எச்சரிக்கை விடுத்துள்ளோம். மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மத்திய அரசு மூலம் மாநில அரசை நிர்பந்திப்போம் எனவும் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை காட்டிலும் கோவில் விவகாரத்தில் நடுநிலையோடு வெளிப்படையான நடவடிக்கையினை தமிழக அரசு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் ஒரு இடத்தில் இருந்த காட்சிகளை மட்டும் வைத்து காவல் துறை முடிவெடுத்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அனைத்து இடங்களிலும் காவல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்த அவர், மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளிக்க இருக்கின்றோம் எனவும் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, அக்கட்சியின் துணை தலைவர் வானதி சீனிவாசன், பொதுச் செயலாளர் ஜி.கே.செல்வக்குமார், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.