கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் ஜவ்காடு பகுதியில் வனத்துறையினர் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் ஜவ்காடு பகுதியில் வனத்துறையினர் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வனக்காப்பாளர் நேருதாஸ் வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலம் வழியாக ரோந்து பணிக்கு சென்ற போது அங்கு நான்கு இளைஞர்கள் மது அருந்திக் கொண்டுள்ளனர்.
இதனையடுத்து வனப்பகுதியை ஒட்டிள்ள இடத்தில் மது அருந்தக்கூடாது யானைகள் நடமாடும் பகுதிகள் என்பதால் கீழே வீசப்படும் கண்ணாடி பாட்டில்களால் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என வனக்காப்பாளர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, ஆத்திரமடைந்த இளைஞர்கள் மது போதையில் வனக்காப்பாளர் நேருதாஸை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து, அவர்களிடமிருந்து தப்பிய வனக் காப்பாளர் அருகிலிருந்த விவசாயிகளை உதவிக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த விவசாயிகள், இது குறித்து கேள்வி எழுப்பிய போது மதுபோதையில் இருந்த இளைஞர்கள் விவசாயிகளையும் தாக்க முற்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, அங்கு திரண்ட மக்கள், இளைஞர்கள் நான்கு பேரையும் மடக்கிப்பிடித்து வனத்துறையில் ஒப்படைத்தனர்.
மேலும், அவர்கள் 4 பேரும் அவர்கள் வந்த சொகுசு காரும் இருட்டுப்பள்ளம் பகுதியிலுள்ள பூலுவம்பட்டி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் இவர்கள் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் அப்பகுதியை சேர்ந்த பிரபல பிரமுகர் மற்றும் அதிமுக நிர்வாகிக்கு நெருக்கமானவர்கள் என தெரிய வந்துள்ளது.

வாகனத்தில் பிரஸ் என பின்புறமும் முன்புறம் அதிமுக கட்சி கொடியும் கட்டபட்டு இருந்தது. இது குறித்து போளுவாம்பட்டி வனச்சரகர் ஆரோக்கியசாமி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு வந்த விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, அங்கு வந்த ஆலந்துறை போலீசார் அவர்கள் நான்கு பேரிடம் விசாரித்து வருகின்றனர். வனக்காப்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதே இடத்தில் நேற்று யானை தாக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் நான்கு பேரும் அங்கு மது அருந்தி, ரகளை செய்தது குறிப்பிடத்தக்கது.