கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வீடியோ கால் மூலம் பேசி நலம் விசாரித்தார்.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வீடியோ கால் மூலம் பேசி நலம் விசாரித்தார்.
கோவை மாநகராட்சியில் 22 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பகுதிகளில் 1103க்கும் மேற்பட்டோர் கொரோனா அறிகுறிகள், கொரோனா நோய் தொற்று உறுதியானவரின் உறவினர்கள், வெளியூர் சென்று வந்தவர்கள் என தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே இவர்கள் நலமுடன் உள்ளார்களா? வீட்டில் தான் உள்ளார்களா? என மாநகராட்சி அதிகாரிகள் உறுதிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன், ஒருபகுதியாக தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் வாஸ்ட் ஆப் மூலம் வீடியோ கால் பேசி மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் உறுதி செய்கின்றனர்.மேலும், அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும் வீடியோ காலில் ஆலோசனை வழங்கப்படுகிறது.
இதற்காக மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் தகவல் மையம் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 10 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அதே போல் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் ஒரு மண்டலத்திற்கு 5 ஆசிரியர் விதம் 25 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் வீடியோ கால் பேசும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனிடையே தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இன்று வீடியோ கால் மூலம் பேசினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறுகையில்:
வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்கள் வீட்டில் உள்ளார்களா? கொரோனா அறிகுறி உள்ளதா? என ஐந்து மண்டலங்களிலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மூலம் தினமும் விசாரிக்கின்றோம். மேலும் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளாமல் பொது வெளியில் சுற்றுபவர்கள் குறித்து தகவல் அளிக்க 1077 உதவி எண்ணை அணுகி தகவல் அளிக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மக்களின் நடமாட்டம் அப்பகுதிகளில் முழுதும் கட்டுப்படுத்தப்படுகிறது.
பயன்படுத்தப்பட்ட பி.டி கிட், மாஸ்க், கையுறைகள்போன்றவைகளை சேகரிக்க தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மற்ற குப்பைகளுடன் இவை கலக்கப்படாது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் சனிக்கிழமை மதியம் முதல் கூட்டமாக சேர்ந்து இறைச்சி மற்றும் மளிகை கடைகளுக்கு செல்வதை குறைத்து கொள்ள வேண்டும்.