கோவை: கோவையில் சாலை ஓரங்களில் வியாபாரத்தில் ஈடுபடும் பொதுமக்களிடம் மாநகராட்சி பணியாளர்கள் மிரட்டி பணம் கேட்பதாக வெளியாகியுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் வயிற்றுப் பிழைப்பிற்காக சாலை ஓரங்களில் வியாபாரத்தில் ஈடுபடும் பொதுமக்களிடம் மாநகராட்சி பணியாளர்கள் மிரட்டி பணம் கேட்பதாக வெளியாகியுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினால், பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. குறிப்பாக, சிறு மற்றும் ரோட்டோரங்களில் கடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்கள் பெரும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, கோவை மாவட்டத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தவர்களும், சொந்தமாக ஒர்க்க்ஷாப் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வந்தவர்களும், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களும் தங்கள் குடும்பத்தின் வயிற்றுப் பசியை போக்குவதற்காக சாலையோரங்களில் தினசரி காய்கறி, முக கவசங்கள், போன்றவற்றை வியாபாரம் செய்து வருகின்றனர். இதில், கிடைக்கும் 300, 400 ரூபாயை வைத்து தங்களது குடும்ப செலவுகளை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு பல்வேறு சிரமங்களில் சாலையோர வியாபாரங்களில் ஈடுபடும் வியாபாரிகளிடம் சில மாநகராட்சியை சேர்ந்த ஊழியர்கள் பணம் வசூல் செய்வதாக, பாமக கட்சியின் நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், கோவை சிங்காநல்லூர் பகுதியில் மாநகராட்சி பணியாளர் ஒருவர் சாலையோர கடைகளில் பணம் வசூல் செய்யும் வீடியோ ஒன்றை கோவையைச் சேர்ந்த பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த நாட்டில் எப்படி பிழைப்பது ?" சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ், ஆள் அனுப்பி, ரோடு ஓரத்தில் கடை வைத்து உள்ளவர்களை மிரட்டி பணம், பொருள் வாங்கிக்கொள்கிறார் எனவும் பதிவிட்டுள்ளார்.
மேலும், இவர் மீது புகார் அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சாலையோர வியாபாரியிடம் மாநகராட்சி ஊழியர் ஒருவர் பணம் கேட்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.