கோவை: கோவையைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் கொரோனா எதிரொலியால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், தமிழக அரசு உரிய நிவாரண தொகை வழங்கி தங்களை மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: கோவையைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் கொரோனா எதிரொலியால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், தமிழக அரசு உரிய நிவாரண தொகை வழங்கி தங்களை மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய இசைக்கு மக்களிடையே ஆர்வம் குறைந்து வருவதால், பாரம்பரிய இசைக் கலைஞர்கள் மிகவும் நலிவடைந்துள்ளனர். மேலும், கலைஞர்களில் சிலர் பல்வேறு தொழில்களை நாடிச் சென்றுள்ளதால், இந்த இசைக்கலையே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் எந்த தொழிலும் தெரியாமல் இசையை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் கலைஞர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இசைத்து தங்கள் வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் கோவில் விழாக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அனுமதி அளிக்கப்படவில்லை.
இதனால் இசைக் கலைஞர்களான ஆர்மோனியம், மிருதங்கம், தபேலா, புல்லாங்குழல், நாதஸ்வரம், கீ போர்டு, நாடகக்கலைஞர்கள், ஒயிலாட்டம், ஆர்கெஸ்ட்ரா, பஜனை குழுவினர் ஆகியோர் பெரிதும் பாதிக்கப்பட்டு மனமுடைந்து வாழ்ந்து வருகின்றனர்.
அதேபோல, கோவை மாவட்டம் முழுவதும் உள்ள 500க்கும் மேற்பட்ட ஆர்கெஸ்ட்ரா கலைஞர்கள் தற்போது திருமண நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறாததால் கிடைத்த வேலைக்கு சென்று பசியாற்றி வருகின்றனர். இப்படி கோவையில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு கலைஞர்கள் வறுமையின் கோரப் பிடியில் மாட்டிக் கொண்டுள்ளனர்.
மேலும், மாதம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வந்த நிலையில், தற்போது கொரொனா எதிரொலியால் தமிழக அரசு வழங்கும் ரேசன் பொருட்களை வைத்து மட்டுமே வாழ்க்கையை நடத்தி வருவதாக இசைக்கலைஞர் சேகர் வேதனை தெரிவித்துள்ளார் .
மேலும், பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து தரும் ஒப்பந்ததாரர்கள் தங்களை கைவிட்டதால் தமிழக அரசை மட்டுமே நம்பி உள்ளதாக இசைக்கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, அனைவரின் உள்ளங்களை மகிழ்விக்கும் இசைக்கலைஞர்கள் தற்போது தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில் அவர்களை மீட்க தமிழக அரசு சிறப்பு நிவாரண தொகை வழங்கி அவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.