கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயிலின் உடலுக்கு போலீசார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்திய சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயிலின் உடலுக்கு போலீசார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்திய சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி நடைபெறும் உயிரிழப்புகளில் பல இடங்களில் இறந்தவர்களின் உடல்களுக்கு உரிய மதிப்பு கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இப்படி தன்னுடன் வாழும் மனிதருக்கே மதிப்பளிக்காத இந்த சூழலில் கோவையில் இறந்த தேசிய பறவையான மயிலின் உடலுக்கு தேசியக் கொடியை போற்றி மரியாதை செலுத்திய காவலரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் இன்று காலை உயர் அழுத்த மின் கம்பியிலிருந்து பாய்ந்த மின்சாரத்தால் சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க மயில் ஒன்று கருகி சம்பவ இடத்திலேயே பலியானது.
இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள், ஆத்மா அறக்கட்டளைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், ஆத்மா அறக்கட்டளையை சேர்ந்த சரவணன், சிங்காநல்லூர் காவல் நிலைய காவலர் சுகுமாரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்று மின்கம்பியில் மாட்டியிருந்த மையிலின் உடலை மீட்டனர்.
இதைத்தொடர்ந்து காவலர் சுகுமார் தேசிய பறவையான மயிலின் இறந்த உடலுக்கு தேசியக்கொடியை போற்றி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து மயிலின் உடல் சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் முனீஸ்வரன் மற்றும் உதவி ஆய்வாளர் அர்ஜுன் மேற்பார்வையில் மதுக்கரை வனச்சரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.