கோவை: சொந்த நாட்டுக்கு செல்ல தமிழக அரசு உதவிட வேண்டும் என இலங்கையைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கோவை: சொந்த நாட்டுக்கு செல்ல தமிழக அரசு உதவிட வேண்டும் என இலங்கையைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் சந்திர மோகனா, பாஸ்கரன் தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் உள்ள தனியார் செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காக தனது தாயார் காந்திமதியுடன் கடந்த டிசம்பர் மாதம் வந்துள்ளார்.
சிகிச்சை பெற்று வந்த சந்திர மோகனா தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். கொரொனா தொற்று பிரச்சனை காரணமாக விமானங்கள் இல்லாததால் சொந்த நாட்டிற்குச் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்தார்.
சிகிச்சை காலத்தில் கோவை புலியகுளம் பகுதியில் தனது தாயாருடன் 5000 ரூபாய்க்கு வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்ததாகவும் தற்போது போதிய நிதி வசதி இல்லாமல் கஷ்டப்படுவதை கண்டு அருகில் வசித்து வருபவர்கள் உதவி செய்து வருவதாக கூறினார்.
மேலும், தனது கணவர் கடந்த மார்ச் மாதம் ஊருக்கு திரும்பிவிட்டதாக தெரிவித்த அவர், தனக்கும் தனது தாய்க்கும் இந்த மாத இறுதியில் விசா முடிய இருப்பதாக தெரிவித்தார். எட்டு மாதமான கர்ப்பிணி பெண்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதியில்லை என்று உள்ள நிலையில் தன்னையும் தன் தாயையும் உடனடியாக இலங்கை செல்ல அனுமதி வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல, குழந்தை இந்தியாவில் பிரசவித்தால் குழந்தைக்கான இலங்கை குடியுரிமை பெறுவதில் நடைமுறை சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் இது தொடர்பாக தங்களுக்கு உதவ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் சந்திரமோகனா மனு அளித்தார்.