நீலகிரியில் தேயிலைத் தோட்டத்திற்கு பெண் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் படுகாயமடைந்தனர்.
நீலகிரி: நீலகிரியில் தேயிலைத் தோட்டத்திற்கு பெண் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் படுகாயமடைந்தனர்.

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சீபுரத்தில் இருந்து பெரிய சோலை என்னும் இடத்தில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்திற்கு 17 பெண்களை ஆண்கள் சிலர் தனியார் வேன் ஒன்றில் வேலைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, வழியில் ஐந்தாவது முடக்கு எனும் பகுதியில் வளைவான இடத்தில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததால் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து, அனைவரும் உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். காயமடைந்த 12 பெண்களில் காளியம்மாள் மற்றும் சுனிதா இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால் கேரளா மற்றும் ஊட்டியில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

ஓவேலி பகுதியில் உள்ள மிகப்பெரிய தேயிலைத் தோட்ட நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த சுமார் 400 தற்காலிக தொழிலாளர்களை அந்த நிறுவனம் கடந்த மாதம் வேலையிலிருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பால் அவதியுறும் தொழிலாளர்கள் வேலைக்காக சிறிய தனியார் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், பிக்கப் வேனில் சென்ற போது இதுபோன்ற விபத்து ஏற்பட்டு பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்து உள்ளனர். தோட்ட நிறுவனம் தற்காலிக தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கியதால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், அவர்களுக்கு வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.