கோவை: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இரண்டு வியாபாரிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இறந்த சம்பவத்தை கண்டித்து கோவையில் இன்று வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
கோவை: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் இறப்பை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த இருவரின் மரணத்திற்கு காவல்துறையினர் தான் காரணம் என்று அவர்கள் குடும்பத்தார் கூறி வரும்.நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் காவலில் இறந்ததை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று (ஜூன் 26) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, நெல்லையில் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், முழு கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவையில் இன்று வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.
அதேபோல, கோவை மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகள் காலை 11 மணி வரை அடைக்கப்பட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இதனிடையே, சாத்தான்குளத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.