கோவை: போலி இ-பாஸ் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பல மாநிலங்களை கடந்து தமிழகம் வந்த சொகுசு பேருந்து கோவை கருமத்தம்பட்டி சோதனை சாவடி வாகன சோதனையில் சிக்கியது.
கோவை: போலி இ-பாஸ் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பல மாநிலங்களை கடந்து தமிழகம் வந்த சொகுசு பேருந்து கோவை கருமத்தம்பட்டி சோதனை சாவடி வாகன சோதனையில் சிக்கியது.
போலி இ பாஸ் பயன்படுத்தி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை கருமத்தம்பட்டி சோதனைச் சாவடியில் அதிகாரிகள் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கோவை வந்த சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது, அவர்கள் பயன்படுத்தி வந்த இ- பாஸ் போலியானது என்பது தெரியவந்தது. சுக்காராம் என்ற பெயரில் ஏற்கனவே பெறப்பட்டிருந்த இ பாஸ் மாற்றி அதை வாகனத்தில் ஒட்டியபடி பயணம் செய்து இருப்பதும் தெரியவந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களை கடந்து தமிழகத்திற்குள் இந்த போலி பாஸ் மூலம் பயணித்து வந்து இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக பேருந்தில் பயணித்த 30 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பேருந்தை பறிமுதல் செய்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலியாக இ பாஸ் தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள ஆதார் எண் உள்ளிட்ட தகவல்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.