கோவை: கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
குறிப்பாக, கொரோனா தொற்று அதிகம் உறுதி செய்யப்பட்டுள்ள டெல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக கோவை வருபவர்கள் அதிகரித்துள்ளதால் கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில், கோவையில் இன்று ஒரே நாளில் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் மரணமடைந்த ஆர்.ஜி.புதூரை சேர்ந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரக்கோணத்திலிருந்து கோவை வந்த பீளமேட்டை சேர்ந்த 2 பேருக்கும், சென்னையில் இருந்து கோவை வந்த சூலூரை சேர்ந்த 3 பேருக்கும், சூலூர் மற்றும் செல்வபுரத்தில் இருந்து உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்ற இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, மும்பையில் இருந்து வந்தவருடன் தொடர்பில் இருந்த செல்வபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து கோவை வந்த இடையர்பாளையம், பொள்ளாச்சி, ரேஸ்கோர்ஸ், என்ஜிஜிஓ காலணி, சோமையம்பாளையம், சங்கனூர் பகுதிகளை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிறுமுகை, வடவள்ளி, பிஎன்பாளையம், ஒண்டிபுதூர், போத்தனூர், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் தலா ஒருவருக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் மொத்த ஆண்கள் 12, பெண்கள் 17 மற்றும் ஒரு சிறுமி, ஒரு சிறுவன் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.