உதகை தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு; குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு..!
நீலகிரி: உதகை தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததால், அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உதகையில் பாம்பே கேசில் பகுதியில் வசித்து வருபவர் முருகன், கீதா தம்பதியினர், இவர்களது மகள் மாயா (21) பிரசவத்திற்காக நேற்றைய முன் தினம் உதகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்றைய தினம், மாயாவிற்கு பிரசவம் ஆன நிலையில், நேற்று இரவு திடீரென உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்துள்ளார், இது அப்பெண்ணின் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து இன்று மருத்துவமனையை முற்றுகையிட்ட அப்பெண்ணின் உறவினர்கள், சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் பெண் உயிரிழந்துள்ளார், எனவே பிரசவம் பார்த்த மருத்துவரை கைது செய்ய வேண்டும் என மருத்துவமனையை மூட வேண்டுமென கூறி மருத்துவமனையினை முற்றுகையிட்டனர்.
இதனால், மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் அப்பெண்ணின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தப் பின் போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும், குழந்தை நலமுடன் இருக்கும் நிலையில் முதல் பிரசவத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.