கோவை: மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் குற்றங்களை தடுப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் இந்த ஆண்டு காவல்துறையினரின் செயல்பாடு சிறப்பாக அமைந்துள்ளது.
கோவை: மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் குற்றங்களை தடுப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் இந்த ஆண்டு காவல்துறையினரின் செயல்பாடு சிறப்பாக அமைந்துள்ளதாக காவல்துறை தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கடந்த ஆண்டில் கொலை, பாலியல் பலாத்காரம், கலவரம், அடிதடி மற்றும் போஸ்கோ வழக்குகளின் கீழ் 2,397 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டு 2,283 ஆக குறைந்துள்ளது. கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் 2019-ம் ஆண்டு முதல் இந்த நாள் வரையில் 197 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. பாலியல் வழக்குகள் 2019-ம் ஆண்டு முதல் இதுவரையில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரதட்சணை இறப்பு வழக்குகள் பொறுத்தவரையில் 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை 1 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு எந்தவித வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை.
பெண்களுக்கு எதிராக 2019-ம் ஆண்டு முதல் இதுவரையில் 337 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போஸ்கோ வழக்குகள் பொறுத்தவரையில் 2019-ம் ஆண்டு இதுவரையில் 175 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவர வழக்குகளைப் பொறுத்தவரையில் 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரையில் 134 ஆக இருந்த கலவர வழக்குகள் 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரை 100 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 34 வழக்குகள் குறைவாகும். 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரையில் 1992 ஆக இருந்த அடிதடி வழக்குகள், 2019-ம் ஆண்டு முதல் இதுவரையில் 1,872 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 120 வழக்குகள் குறைவாகும். இவ்வாண்டு 73 குண்டர் தடுப்பு சட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 12,784 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்கு மண்டலத்தைப் பொறுத்தவரையில் 2019-ம் ஆண்டு முதல் தற்போது 23,668 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, ஈரோடு மாவட்டத்தில் 8,702 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், குற்றவழக்குகளை எளிதில் அடையாளம் காண ஏதுவாக உள்ளது.
மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களிலும் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மதுவிலக்கு வழக்குகள், சூதாட்ட வழக்குகள், கஞ்சா வழக்குகள் மற்றும் லாட்டரி வழக்குகள் பிடிக்கப்பட்டுள்ளன.
லாட்டரி சட்ட வழக்குகள் 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரையில் 668 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுவிலக்கு சம்பந்தமான வழக்குகள் 2019-ம் ஆண்டு முதல் இதுவரையில் 15,464 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூதாட்ட வழக்குகளை பொறுத்தவரையில் 2019-ம் ஆண்டு இதுவரையில் 445 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகையிலை மற்றும் கஞ்சா தொடர்பான வழக்குகள் 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரையில் 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரையில் 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இது சென்ற ஆண்டைவிட 32 வழக்குகள் அதிகமாகும். மணல் கடத்தல் வழக்குகள் பொறுத்தவரை 2018-ம் ஆண்டு இதுவரையில் 194 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு முதல் தற்போது 267 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 73 வழக்குகள் அதிகமாகும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.