கோவை : கோவையில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவத்திற்கு சித்த மருத்துவர் தான் காரணம் என பொய்யான தகவல் பரப்பி வருவதாகவும், சித்த மருத்துவ தொழிலில் சுதந்திரம் வேண்டியும் சித்தமருத்துவர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : கோவையில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவத்திற்கு சித்த மருத்துவர் தான் காரணம் என பொய்யான தகவல் பரப்பி வருவதாகவும், சித்த மருத்துவ தொழிலில் சுதந்திரம் வேண்டியும் சித்தமருத்துவர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன் சத்யப்பிரியா (20) என்ற கோவை அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவி உடல் நலப் பிரச்சினையின் காரணமாக உயரிழந்தார். மாணவியின் இறப்பிற்கு செல்வபுரம் மனோன்மணி சித்த வைத்திய சாலை என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வரும் சித்த மருத்துவர் குருநாதன் தான் காரணம் என குற்றம் சாட்டிய மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவை சித்த மருத்துவர்கள் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- தங்களது சங்கம் கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. உயிரிழந்த மாணவி கடந்த ஒரு வருடகாலமாகவே இந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் சித்தமருத்துவரை நாடிய அந்த மாணவிக்கு உரிய தரச்சான்று பெற்ற மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவிக்கு ஆங்கில மருந்துகள் உட்கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், இந்த சம்பவத்தில் மாணவியின் உயிரிழப்புக்கு சித்தமருத்துவமோ, மருத்துவரோ காரணமல்ல. சித்த மருத்துவத்தின் மீது பொய்யான தகவல் பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் பாரம்பரிய சித்த மருத்துவர்கள் தொழில் சுதந்திரத்துடன் தொழில் புரிய பாதுகாப்பு செய்து தர வேண்டும், என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.