கோவை : இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கோவையில் 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை : இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கோவையில் 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் கடந்த ஈஸ்டர் அன்று தேவாலயங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் பல உயிர்கள் பலியாகிய சம்பவம் உலக அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, சர்வதேச நாடுகள் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும், இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் யார் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என பல விசாரணைகளும் நடைபெற்றது. இதில், இந்த குண்டுவெடிப்புக்கும் கோவையில் உள்ள சில இளைஞர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள உக்கடம் அன்புநகர், குனியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட 7 இடங்களில் குறிப்பிட்ட சில இளைஞர்கள் வீடுகளை சோதனையிட்டு வருகின்றனர். அதேபோல, சமூகவலைதளங்களில் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடை பெற்று வருகிறது. தற்போது நடந்து வரும் விசாரணையில், இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுப்பட்ட தீவிரவாதிகளின் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், சோதனை நடைபெற்று வரும் அனைத்து வீடுகளிலும் கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்ற ஆவணங்கள், வங்கி கணக்கு, பாஸ்போர்ட், தொலைபேசி இணைப்பு போன்றவை குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையை கேரளாவில் உள்ள தேசிய புலனாய்வு முகமை பிரிவைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையானது 7 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையை அடுத்து கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.