திருப்பூர் : திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்புராயன் வெற்றி பெற்றதையடுத்து, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்ட பேனரில் தி.மு.க. நிர்வாகியின் பெயர் போடாததால், ஆத்திரத்தில் பேனரை கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் : திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்புராயன் வெற்றி பெற்றதையடுத்து, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்ட பேனரில் தி.மு.க. நிர்வாகியின் பெயர் போடாததால், ஆத்திரத்தில் பேனரை கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட சுப்புராயன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. வேட்பாளருமான எம்.எஸ்.எம். ஆனந்தனை விட 93,368 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து, நகரின் பல்வேறு பகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியான தி.மு.க. வினரும் வாழ்த்து மற்றும் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்களும், பேனர்களையும் வைத்தனர். இதில், திருப்பூர் வளம் பாலம் அருகே செல்லாண்டியம்மன் கோவில் அருகே 44-வது வார்டு பகுதி கழக இளைஞர் அணி பொறுப்பாளர் (ஷ்டிம்) ரியாஜ் என்பவர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளரை வெற்றி பெற வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து, 10 அடி உயரம் மற்றும் 40 அடி நீளத்தில் பேனர் ஒன்றை வைத்தார்.
இந்த பேனரில், தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் புகைப்படம் மற்றும் பெயர்கள் இடம் பெற்றிருந்த நிலையில், 44-வது வார்டு பகுதி கழக செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான உசேன் என்பவரின் பெயர் மட்டும் விடுபட்டிருந்தது. இதனால், ஆத்திரமடைந்த அவர், தனது பெயர் போடாமல் வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்தெறிந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தி.மு.க.வினர் கிழிக்கப்பட்ட பேனரை உடனடியாக அகற்றியதுடன் அந்த இடத்தில் சிறிய அளவிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேனரை மட்டும் வைத்து சென்றனர். பெயர் போடாமல் வைக்கப்பட்ட பேனரை அதே கட்சியினர் கிழித்தெறிந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.