கோவை : தமிழ்நாடு நகர்ப்புற முதலீட்டு திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி மற்றும் குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
கோவை : தமிழ்நாடு நகர்ப்புற முதலீட்டு திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி மற்றும் குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்த பாதாள சாக்கடை திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.578.77 கோடியாகும். அதில், 33 % நிதி அம்ரூத் திட்டத்திலும், 20 % நிதி தமிழக அரசும் வழங்கியது போக, எஞ்சிய 47 %-த்தை கோவை மாநகராட்சி நிர்வாகம் ஆசிய மேம்பாட்டு வங்கியில் கடன் பெற்றுள்ளது. இந்த திட்டப் பணிகள் எல்&டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கிய நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்குள் முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் பல்வேறு தடுப்புகளை வைத்து எல்&டி நிறுவனம், பாதாள சாக்கடை திட்டப் பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறது.

இதனிடையே, பாதாள சாக்கடையில் ஓடும் கழிவுநீர்களால் துர்நாற்றம் வீசும் அபாயம் ஏற்படும் என அப்பகுதி மக்கள் கேள்விகளை எழுப்பினர். அப்போது, துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் கருவிகள், 30 வெளியேற்றுதல் மையங்களில் பொருத்தப்படுவதால், துர்நாற்றம் வெளியாகாதவாறு கட்டுப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், “பாதாள சாக்கடையின் முக்கிய வெளியேற்றுதல் நிலையத்தில் வெளியேறும் துரநாற்றத்தைக் கட்டுப்படுத்த தீர்வு காணப்பட்டது. இதைதொடர்ந்து, கட்டுப்பாட்டு கருவிகள் 30 வெளியேற்றுதல் நிலையத்திலும் பொருத்தப்படுவதால், துர்நாற்றம் முற்றிலும் நீக்கப்படும்,” என தெரிவித்தார்.
மேலும், பாதாள சாக்கடைக்காக தோண்டப்படும் குழிகளால், வாகனங்களை இயக்க முடியாத அளவிற்கு சாலைகள் பழுதாகி விடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

“வரும் நாட்களில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வரும் போது, அவை தடுத்து நிறுத்தப்படலாம். காரணம், எங்களது கார்களை வெளியே எடுத்து வர முடியாத நிலை ஏற்படும்,” என்கிறார் அபிராமி நகர் குடியிருப்புவாசி சந்திரா.
இது குறித்து மூத்த அதிகாரிகள் கூறுகையில், ”எங்களின் முக்கிய நோக்கமே, இந்தப் பணிகளாக் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடாது என்பதுதான். இந்தப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாக பொதுமக்களிடம் இது தொடர்பான தகவல்கள் எடுத்துச் செல்லப்படும். இந்த திட்டப் பணிகள் தாமதமாகும் என பொதுமக்கள் கவலை கொள்ள வேண்டாம். அறை கட்டுமானம் 5 நாட்களில் முடிவடைந்து விடும். பின்னர், 2 நாட்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு, 48 மணி நேரத்தில் பணிகள் முடிக்கப்படும். மேலும், பொது மக்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், அது உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்,” எனக் கூறினார்.
திட்டப் பின்னணி : கடந்த 2011-ம் ஆண்டு கோவை மாநகராட்சியுடன் பஞ்சாயத்து மற்றும் கிராமங்கள் இணைக்கப்பட்டன. இதனால், 105.60 சதுர கி.மீ.ஆக இருந்த பரப்பளவு 257.04 சதுர கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. புதியதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தவில்லை. எனவே, இந்தத் திட்டத்தின்படி, இணைக்கப்பட்டுள்ள 40 வார்டுகளில் 14 வார்டுகள் இத்திட்டப் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு திட்டம் :
சுமார் 434.52 கி. மீ தூரத்திற்கு மேற்கொள்ளப்படும் பாதாள சாக்கடை கழிவுநீர் திட்டத்தின் கீழ், 11 வெளியேற்றுதல் நிலையங்களும், 19 தூக்கு நிலையங்களும் அமைக்கப்படுகின்றன. அவற்றில் 5 வெளியேற்றுதல் நிலையங்கள் குனியமுத்தூரிலும், 6 வெளியேற்றுதல் நிலையங்கள் குறிச்சி பகுதியிலும் அமைக்கப்படுகிறது. மேலும், 19 தூக்கு நிலையங்கள், நாள்தோறும் 39 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வெள்ளலூரில் கொண்டு வரப்படுகிறது.
இந்த கழிவுநீர் மேலாண்மை திட்டம் 13 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து தெருக்களும் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.