கோவை : சூலூர் தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா அமோகமாக நடந்து வருகிறது.
கோவை : சூலூர் தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா அமோகமாக நடந்து வருகிறது.
17-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நாடு முழுவதும் நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் காலியாக இருந்த 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற்றது. காலியாக இருந்த சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடத்தி, வாக்கு எண்ணிக்கை 23-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை தொடர்ந்து, கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று மாலை ஐந்து மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற உள்ளது. இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் கடைசி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா படு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகள் தலா ஒருவருக்கு ரூ. 1,000, ரூ. 2,000 என பூத் சிலிப் வழங்கும் ஏஜெண்ட் மூலம் பணம் விநியோகம் செய்யபட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் பணபட்டு வாடா முடிந்த நிலையில், ஒரு சில இடங்களில் பூத் ஏஜெண்டுகள் பணம் தரவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. கட்சி வழங்கிய தேர்தல் நிதியை பூத் ஏஜெண்டுகள் தங்களுக்கு தெரிந்தவர்கள், வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே விநியோகம் செய்ததாக புகார் அளித்து உள்ளனர். இது தேர்தல் பொறுப்பாளர்களின் காதுகளுக்கு எட்டியதால், முக்கிய கட்சிகளின் தலைவர்கள் டென்ஷனாகி உள்ளனர். மேலும், வழங்கப்பட்ட பணத்தை அனைவருக்கும் பிரித்து வழங்கிட கூறி கண்டிப்புடன் தெரிவித்து உள்ளனர். எது எப்படியோ ஜனநாயகத்தை பணநாயகம் மூலம் கொடுத்து கட்சியினர் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர்.