கோவை : திருமண விழாவின் போது கார்கள் உரசிக் கொண்டதால் எழுந்த பிரச்சனையில், இளைஞரை விடுதியில் அடைத்து வைத்து பணம் பறித்த 9 பேர் கொண்ட கும்பலை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை : திருமண விழாவின் போது கார்கள் உரசிக் கொண்டதால் எழுந்த பிரச்சனையில், இளைஞரை விடுதியில் அடைத்து வைத்து பணம் பறித்த 9 பேர் கொண்ட கும்பலை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சிங்காநல்லூரைச் சேர்ந்த கோகுல் என்பவரின் காரை அவரது நண்பர் சுண்டக்காமுத்தூர் அருகே உள்ள திருமண நிகழ்ச்சிக்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, வாகனம் நிறுத்தும் பொழுது செல்வபுரத்தை சேர்ந்த அஜித்குமார் கோகுலின் காரில் உரசலை ஏற்படுத்திவிட்டார். இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், கோகுல் தரப்பினர் காரில் ஏற்பட்ட கீறலுக்கு அதிக பணம் கேட்டுள்ளனர். ஆனால், அஜித்குமார் தரப்பினர் அதிக பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால், தொடர்ந்து இவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில், கோகுல் தரப்பினர் அஜித்குமாரிடம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று சிங்காநல்லூர் அழைத்துள்ளனர். இதையடுத்து, கடந்த 11ஆம் தேதி கோகுல் தரப்பினரின் அழைப்பை ஏற்று வந்த அஜீத்குமாரை கோகுலுடன் வந்த கும்பல் சிங்காநல்லூர் அருகே உள்ள தனியார் விடுதியில் அடைத்து வைத்தனர். மேலும், அவர்கள் அஜித்குமாரை அடித்து சித்திரவதை செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அத்துடன் அவரிடம் இருந்த 6,000 ரூபாய் பணம், செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் மிரட்டி பறித்து கொண்டனர்.
இதையடுத்து, நேற்று காலை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அஜித்குமார் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர்கள் அர்ஜுன், காசிப்பாண்டியன், தலைமை காவலர்கள் சுகுமார், பாலமுருகன் மற்றும் அனீஸ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு குற்றத்தில் தொடர்புடைய சிங்காநல்லூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கோகுல், சுமேஷ், மதன், கார்த்திக், சங்கர், சிவகுமார், மனோஜ், முஜிபுர் மற்றும் சிம்சோன் ஆகிய 9 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும், போலீசார் இவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் அனைவரும் கோகுல்ராஜின் நண்பர்கள் என்பதும், இந்த கும்பலில் இருக்கும் சிலர் மீது கொலை, கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6,000 ரூபாய் ரொக்கம், செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், இவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.