கோவை : வயது முதிர்வின் காரணமாக தி.மு.க. முன்னாள் எம்.பி. எம். ராமநாதன் இன்று காலமானார். அவரது உடலுக்கு அஞசலி செலுத்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று கோவை வருகிறார்.
கோவை : வயது முதிர்வின் காரணமாக தி.மு.க. முன்னாள் எம்.பி. எம். ராமநாதன் இன்று காலமானார். அவரது உடலுக்கு அஞசலி செலுத்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று கோவை வருகிறார்.
ஏற்கனவே நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்த அவர், வயோதிகம் காரணமாக தனது 84-வது வயதில் இன்று காலை கோவை செட்டி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மறைந்த எம். ராமநாதனின் உடலுக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, முன்னாள் எம்.பி. ராமநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று காலை 11.30 மணியளவில் கோவை வருகிறார். அவருடன் கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்களும் வர இருப்பதாகக் கூறப்படுகிறது.
84 வயதான முன்னாள் எம்.பி. ராமநாதன், 1959-ம் ஆண்டு முதல் கோவை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக, 1992-96 வரை கோவை மாவட்ட தி.மு.க. தலைவராகவும் இருந்துள்ளார். 1984 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் கோவை மேற்கு தொகுதியில் இருந்து இரு முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.1996-ம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
கட்சியில் மாநகர, மாவட்ட பொறுப்புகள் வகித்த அவர், பின்னர் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார். இவரது மனைவி பெயர் ராமகாந்தம். இவருடைய 5 மகன்களில் இருவர் உயிரிழந்து விட்ட நிலையில், மூவர் மட்டும் இராமநாதனுடன் உடன் இருக்கின்றனர்.