கோவை : கோவை விமான நிலைய பார்க்கிங் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததை, தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.
கோவை : கோவை விமான நிலைய பார்க்கிங் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததை, தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு சொந்தமான காரினை ரெட் டெக்சி நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்த காரினை கோவை குனியமுத்தூர் அருகேயுள்ள பி.கே. புதூரைச் சேர்ந்த ராஜேஷ் என்ற ஒட்டுநர் ஓட்டி வந்தார். இந்த நிலையில், இன்று கோவை விமான நிலையத்திற்கு வாடகைக்காக ராஜேஷ் காரில் வந்துள்ளார். அங்கு பயணிகளின் வருகைக்காக, விமான நிலையத்திற்கு முன்புள்ள பார்க்கிங் பகுதியில் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, திடீரென கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
தீ மளமளவென பற்றி எரிந்ததில் கார் எரிந்து முற்றிலும் சேதமானது. இதையடுத்து, விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட போது ஓட்டுநர் ராஜேஷ் வெளியே இருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து, இந்த தீ விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில், தீ விபத்து குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு நிறைந்த விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கார் தீயில் எரிந்து கருகிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.