கோவை : நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் பணிகளுக்காக துணை ராணுவத்தினர் ரயில் மூலம் இன்று கோவை வந்தடைந்தனர்.
கோவை : நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் பணிகளுக்காக துணை ராணுவத்தினர் ரயில் மூலம் இன்று கோவை வந்தடைந்தனர்.

நாடு முழுவதும் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்துள்ளது. இதில், தமிழகத்திற்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனிடையே, வேட்பு மனு தாக்கல் மார்ச் 19-ம் தேதி தொடங்கி, மார்ச் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து துணை ராணுவப் படையைச் சேர்ந்த இரு கம்பெனி போலீசார், ரயில் மூலம் கோவை வந்து உள்ளனர். மொத்தம் 168 பேர் வந்து உள்ளனர். அதில், ஒரு கம்பெனி போலீசார் கோவைக்கும், மற்றொரு கம்பெனி போலீசார் மதுரையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். அதேபோல, மார்ச் 30-ம் தேதிக்குப் பிறகு துணை ராணுவத்தினர் இன்னும் கூடுதலாக வருவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.