திருப்பூர் : அதிகாலை முதலே மது விற்பனை நடைபெறுவதைக் கண்டித்து, கையில் கத்தியுடன் டாஸ்மாக் கடை முன் பெண் தர்ணா மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டார்.
திருப்பூர் : அதிகாலை முதலே மது விற்பனை நடைபெறுவதைக் கண்டித்து, கையில் கத்தியுடன் டாஸ்மாக் கடை முன் பெண் தர்ணா மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டார்.

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் 2310 எண் கொண்ட டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது. இதற்கு முன்பாக, காலை 5 மணி முதலே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால், தனது கணவர் தினமும் குடித்து விட்டு பணிக்கு செல்லவில்லை எனவும், பனியன் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றும் எங்கள் குடும்பம் மிகவும் வறுமையில் வாடுகிறது எனவும் கூறுகிறார் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கவிதா.
இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால், ஆத்திரமடைந்த கவிதா இன்று கையில் கத்தி மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் டாஸ்மாக் கடைமுன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதையடுத்து, சாலைமறியலிலும் ஈடுபட்டார். இந்நிலையில், டாஸ்மாக் கடை முன்பாக பெண் ஒருவர் கத்தியுடன் அமர்ந்து போராடுகிறார் என பரவிய தகவலால், அவரை காண ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதியில் குவிந்தனர்.
இதையடுத்து, தகவலறிந்து திருமுருகன் பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மது விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், அங்கு விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு பெட்டி மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், கவிதாவை விசாரணைக்குக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.