கோவை : பாப்பநாயக்கன் பாளையம், பட்டத்தரசி அம்மன் கோயிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணம் மற்றும் ஐம்பொன் சிலையை திருடிச் சென்ற சம்பவம் குறித்து பந்தய சாலை குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. இன்று காலை இந்த கோவிலை திறக்க வந்த ஊழியர் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த பொழுது உண்டியல் உடைக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவிலுக்குள் இருந்த ஐம்பொன் சிலையும் திருடப்பட்டிருந்தது. இதையடுத்து, கோவில் ஊழியர்கள் பந்தய சாலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த பந்தய சாலைக் குற்றப்பிரிவு போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் குற்றவாளிகள் குறித்து சோதனை நடத்தி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த மர்ம கும்பலைப் பிடிக்க கோவை மாநகர குற்றப் பிரிவு துணை ஆணையாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்க, போலீசார் விரைந்துள்ளனர்.