கோவை : தொண்டாமுத்தூர் பகுதியில், வனவிலங்குகளால் விளைநிலங்களில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி சிறுத்தை, புலி,கரடி என வனவிலங்கு வேடமணிந்து மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர்.
கோவை : தொண்டாமுத்தூர் பகுதியில், வனவிலங்குகளால் விளைநிலங்களில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி சிறுத்தை, புலி,கரடி என வனவிலங்கு வேடமணிந்து மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது :- தொண்டாமுத்தூர் பகுதியில் ஏராளமான விவசாயிகளின், விளை நிலங்களில் யானைகள், மயில், பன்றி, செந்நாய், குரங்கு சிறுத்தை போன்றவைகளால் விவசாய பயிர்கள் பாதிப்பு ஏற்படுகிறது. அவை, தோட்டங்களில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை கொன்று விடுகின்றன.
மேலும், அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. அதனைப் பிடிக்க வனத்துறை 15 நாட்களுக்கு முன்பு கூண்டு வைத்தது. ஆனால், இன்று வரை அது பிடிபடவில்லை. வனத்துறையினர் மெத்தனமாகச் செயல்படுகின்றனர். இதனால், விவசாயிகள் அச்சத்துடனே அங்கு விவசாயம் செய்து வருகிறோம்.
வன நிர்வாகம், சிறுத்தை நடமாட்டத்தை ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், அது விளைநிலங்களில் வருவதைத் தடுக்க சிறப்பு படை நியமனம் செய்ய வேண்டும். மேலும், விளை நிலங்களில் வனவிலங்குகள் வருவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, வனவிலங்கு வேடமணிந்து வந்து கொடுத்தனர். இதனைப் பிற மனுதாரர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.