கோவை : விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் சொற்ப அளவிலான துறை அதிகாரிகளே கலந்துகொள்வதால் தங்களது கோரிக்கைகளை முழுவதுமாக விவாதிக்க இயலாத நிலை உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை : விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் சொற்ப அளவிலான துறை அதிகாரிகளே கலந்துகொள்வதால் தங்களது கோரிக்கைகளை முழுவதுமாக விவாதிக்க இயலாத நிலை உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) துரை.ரவிச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய சங்கங்களும் விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களின் குறைகளை அதிகாரிகளிடம் மனுவாக அளித்தனர்.

இக்கூட்டத்தில், வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் விவசாயிகளை மிரட்டி உயர்மின்கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொள்வதை நிறுத்த வேண்டும். உயர்மின் இணைப்புகளைத் தரை வழியாகக் கொண்டு செல்ல வேண்டும். நீர் வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள வீட்டுமனை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், விவசாயிகள் விரும்பும் நிறுவனங்கள் மூலம் கருவிகள் பெற அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் மனுவாக அளித்தனர். இந்நிலையில், பெறப்பட்ட மனு குறித்து விவாதித்து விளக்கமளிக்க பெரும்பாலான துறை அதிகாரிகள் வராததால், புகாரளிக்க வந்த விவசாயிகள் கொந்தளித்தனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி கூறுகையில், "விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் 32 துறை அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும். ஆனால், மிக சொற்பமான அதிகாரிகள் தான் கலந்து கொள்கின்றனர். இதனால், விவசாயிகளின் பிரச்சனைகளையும், குறைகளையும் அதிகாரிகளிடம் விவாதிக்க இயலாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பிரச்சனைக்குரிய துறை அதிகாரிகள் கலந்துகொள்ளாததால் விவசாயிகளின் பிரச்சனைகளும், கோரிக்கைகளும் தொடர்கதையாகி வருகின்றது. வருங்காலங்களில் இதுபோன்ற நிலையை மாவட்ட நிர்வாகம் மாற்றிக் கொள்ள வேண்டும்", என்றார்.