கோவை: கோவை விமான நிலையத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வந்த போது வடமாநில இளைஞர் ஒருவர் அவரை நோக்கி "பாரத் மாதா கீ ஜே" என முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை விமான நிலையத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வந்த போது வடமாநில இளைஞர் ஒருவர் அவரை நோக்கி "பாரத் மாதா கீ ஜே" என முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஈரோட்டில் நடைபெற்ற கலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கார் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் திமுகவினர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது திமுக தலைவர் தளபதி வாழ்க என முழக்கமிட்டனர்.

அப்போது அங்கிருந்த வடமாநில இளைஞர் ஒருவர் "பாரத் மாதா கீ ஜே " என முழக்கமிட்டார். இதனால் விமான நிலையத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதே வேளையில் திமுக தலைவர் ஸ்டாலின் விமான நிலையத்திற்குள் சென்றார். இதனையடுத்து, போலீசார் அந்த வட மாநில இளைஞரிடம் விசாரணை மேற்கொண்ட போது , பெங்களுரில் நடைபெறும் கண்காட்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்து விட்டு, கோவையில் இருந்து டெல்லி செல்ல இருப்பதும் அவர் பெயர் சரீஷ் ஹரி ஒம் காசியாபாத் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் மது போதையில் இருப்பதும் தெரியவந்த நிலையில் காவல் துறையினர் அந்த இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.