நீலகிரி : கோத்தகிரியில் இரண்டாம் கட்டமாக 'டிஜிட்டல் சர்வே' பணிகள் நடந்துவரும் நிலையில், நிலத்தில் பதிப்பதற்காக, புதிய 'சர்வே' கற்கள் தயார் நிலையில் உள்ளன.
நீலகிரி : கோத்தகிரியில் இரண்டாம் கட்டமாக 'டிஜிட்டல் சர்வே' பணிகள் நடந்துவரும் நிலையில், நிலத்தில் பதிப்பதற்காக, புதிய 'சர்வே' கற்கள் தயார் நிலையில் உள்ளன.
நீலகிரி, கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் முதன்முறையாக 'டிஜிட்டல்' முறையில் சர்வே செய்ய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், கோத்தகிரியில் முதற்கட்டமாக, மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பே இப்பணியைத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தில், அதிநவீன கருவிகளை கொண்டு மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் கோவிந்தசாமி மேற்பார்வையில் நில அளவை ஆய்வாளர் உதயகுமார் தலைமையில், 34 அளவையர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கோத்தகிரி தாலுகாவில் சர்வே கற்கள் காணாமல் போன இடங்களிலும், தாலுகா வரைபடத்தில் உள்ள நிலங்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இரண்டாவது கட்டமாக, சர்வே கற்கள் இல்லாத இடங்களில் புதிய கற்கள் பதிக்கப்பட்டு, நிலம் வரைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சங்கிலி மற்றும் டேப் மூலம் சர்வே செய்யப்பட்ட நிலையில், முறையாக நிலத்தை அளக்க முடியாத நிலை இருந்தது. டிஜிட்டல் முறையில் மறு அளவை செய்யப்பட்டுள்ளதால், கோத்தகிரி தாலுகாவில், 15 வருவாய கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதிலும், அந்தந்த நிலங்கள் துல்லியமாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் நில உரிமையாளர்களுக்கு, நிலத்தின் துல்லிய தன்மை தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக நிறைவடைந்துள்ள பணிகளை, அரசின் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனர் ஏற்கனவே ஆய்வு செய்து சென்றுள்ளார். டிஜிட்டல் முறையில் நில அளவை செய்வதற்கு, நில உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருவதால், இரண்டாம் கட்ட டிஜிட்டல் மறு நில அளவை பணி முழுமைப்பெற காலதாமதம் ஏற்படக்கூடிய நிலை உள்ளது.