கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தொழிற்சங்கத்தினர் 500 -க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தொழிற்சங்கத்தினர் 500 -க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தொழிற்சங்கங்கள் சார்பில், பொதுப்பணித்துறை பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

கோவை ரயில் நிலையத்தில் இரண்டாவது நாளாக நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொழிற்சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐ.என்.டி.யு.சி, ஏ.ஐ.டி.யு.சி, ஹெச்.எம்.எஸ், எல்.பி.எப், தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர் சங்கம், இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு, எம்.எல்.எப்,எஸ்.டி.பி.ஐ,.யின் கிளை அமைப்பான எஸ்.டி.டி.யூ,சி.ஐ.டி.யு, மற்றும் இருசக்கர வாகன பழுது பார்க்கும் பணிமனை ஊழியர்கள் உள்ளிட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, ரயில் நிலையத்திற்குள் நுழைந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து தொழிலாளர் நல சட்டங்களை திருத்தாதே, பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை அமல்படுத்து, தொழிற்சங்களை பழிவாங்காதே, இந்திய பொதுத்துறை நிறுவனங்களை கார்பரேட் நிறுவனத்துக்கு விற்கும் முயற்சியைக் கைவிடு என மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

எனவே, போராட்டத்தில் ஈடுபட்ட 500 -க்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட 24,631 பேரை இதுவரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை போலவே, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏ.ஐ.டி.யூ.சி, சத்துணவு அமைப்பாளர், பம்ப் ஆபரேட்டர்கள் சார்பில் கோத்தகிரி பஸ்நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 70 -க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.
