திண்டுக்கல் : கொடைக்கானலில் தொடங்கியுள்ள உறைபனி சீசன் காரணமாக நேற்றிரவு முதல் பூஜ்ஜியம் டிகிரி வெப்பநிலை நிலவுகிறது.
திண்டுக்கல் : கொடைக்கானலில் தொடங்கியுள்ள உறைபனி சீசன் காரணமாக நேற்றிரவு முதல் பூஜ்ஜியம் டிகிரி வெப்பநிலை நிலவுகிறது.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த வருடம் டிசம்பர் 15 -ம் தேதி முதல் கடும் பனிப்பொழிவு நிலவி வந்தது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரியாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாகவே உறைபனி சீசன் தொடங்கியுள்ளது.
இதனால், நேற்றிரவு முதல் 0 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது. எனவே, கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதி, பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம் ஆகியப் பகுதிகளில் உறை பனி காணப்பட்டது. மேலும், கொடைக்கானல் ஏரி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வெண்ணிற ஆடை போர்த்தியது போல பனித்துகள்கள் காட்சியளிக்கின்றன.
உறைபனிப் பொழிவால் மினி காஷ்மீர் போலத் தோற்றமளிக்கும் கொடைக்கானலைக் காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். கடும் பனிப்பொழிவால் கொடைக்கானல் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்படுகிறது.
மேலும், மேல்மலை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கேரட், பூண்டு உள்ளிட்ட பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசிய கொடைக்கானல் வானியல் மைய விஞ்ஞானி கூறும் போது கொடைக்கானலில் நிலவி வரும் உறைபனி சீசனானது பிப்ரவரி 15 -ம் தேதி வரை நீடிக்கும் என கூறியுள்ளார். சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இது போன்ற நிலை காணப்படுவதாக கொடைக்கானல் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.