நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில், ஹெத்தை அம்மன் திருவிழாவை படுகர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய சிறப்பு வழிபாடுகளுடன், காணிக்கை செலுத்தி இன்று கோலாகலமாக கொண்டாடினர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில், ஹெத்தை அம்மன் திருவிழாவை படுகர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய சிறப்பு வழிபாடுகளுடன், காணிக்கை செலுத்தி இன்று கோலாகலமாக கொண்டாடினர்.
நீலகிரி மாவட்டத்தில் 300 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இதில் பேரகணி, ஜெகதளா, ஒன்னதலை, பெத்துவா, தாவணெ, குந்தா, சின்னகுன்னூர், எப்பநாடு, கேத்தி, பந்துமை, உயிலட்டி, நெடுகுளா, பெப்பேன், கூக்கல் ஆகிய 14 கிராமங்களில் ஹெத்தையம்மன் கோயில்களில் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிகளுடன் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் கோயிலில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குலதெய்வ வழிபாட்டினை நடத்துவது வழக்கம். இவ்வாண்டுக்கான திருவிழா கடந்தவாரம் பேரகணியில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று ஜெகதளாவில் ஹெத்தையம்மன் வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான படுகர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய ஆடை அணிந்து கலந்து கொண்டனர்.

மேலும், இவ்விழாவில் பக்தர்கள் தேயிலை தோட்டங்களின் வழியாக நடனமாடி, கோயிலை வந்தடைந்தனர். ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களைச் சேர்ந்த ஹெத்தைக்காரர்கள் எனப்படும் பக்தர்களும் 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு பாரம்பரியமாக நடத்தும் பூஜைகளை நடத்தினர்.
