கோவை : ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் தவறிழைத்துவிட்டதை மறந்து பிரதமர் மோடி 99 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டியை குறைக்க இருப்பதாகக் கூறிவருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் விமர்சித்துள்ளார்.
கோவை : ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் தவறிழைத்துவிட்டதை மறந்து பிரதமர் மோடி 99 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டியை குறைக்க இருப்பதாகக் கூறிவருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் விமர்சித்துள்ளார்.
கோவையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு தலைமையகமான ஜீவா இல்லத்தில் அதன் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- மோடியின் தவறான பொருளாதார, அரசியல் கொள்கைகள் காரணமாக பெண்கள், குழந்தைகள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் என அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் தவறிழைத்துவிட்டதை மறந்து பிரதமர் மோடி 99 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டியை குறைக்க இருப்பதாகக் கூறுகிறார். இதற்கிடையே, தவறான ஜி.டி.பி எண்களைக் கூறி, மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறார்.
மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்கிற ஒரே கொள்கையின் அடிப்படையில் காங்கிரசை ஆதரிக்க நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளது. பாஜகவிற்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.
சி.பி.ஐ, ஆர்.பி.ஐ உள்ளிட்ட அரசின் அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிமக்களின் குடியுரிமை மற்றும் தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் உளவு பார்க்கும் உரிமையை 10 அமைப்புகளுக்கு வழங்கியிருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அந்த முறையில் ஆழ்ந்த கவலையளிப்பதாக உள்ளது.
மேலும், ராகுலை பிரதமராக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கருத்து திமுகவின் தனிப்பட்ட கருத்தாகும். யார் பிரதமர் என்பதை தேர்தல் முடிந்த பிறகு ஒருங்கிணைந்து செயல்படும் கட்சிகள் தான் முடிவு செய்யும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வர முடியாத அளவிற்கு நடிகைகளின் திருமணங்களுக்கு பிரதமர் சென்று வருகிறார். இந்நிலையில், மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்காமல் எல்லா முடிவுகளையும் நிபந்தனையின்றி ஆதரிக்கும் கட்சியாக மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க அரசு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், இந்த சந்திப்பில் அக்கட்சியின் தேசிய செயலாளர் பல்லவ் செங்குப்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.