கோவை: மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட வனப்பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணியை கேமரா மற்றும் ஜி.பி.எஸ்., கருவிகளுடன் உரிய பயிற்சி பெற்ற வனத்துறையினர் தொடங்கியுள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட வனப்பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணியை கேமரா மற்றும் ஜி.பி.எஸ்., கருவிகளுடன் உரிய பயிற்சி பெற்ற வனத்துறையினர் தொடங்கியுள்ளனர்.
வனத்திற்குள் கிடைக்கும் புலிகளின் காலடித்தடம் மற்றும் அதன் எச்சம் மூலமாக மட்டுமே இதுவரை புலிகளின் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வந்தது. இந்த முறையால் குறிப்பிட்ட பகுதியில் எத்தனை புலிகளின் நடமாட்டம் உள்ளது, குறிப்பிட்ட வனச்சரகத்திற்குள் அவற்றின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்த முழுமையான தகவல்களை கணக்கிட இயலாத நிலை ஏற்பட்டது.
ஒரு வனச்சரக எல்லைக்குள் கணக்கிடப்பட்ட ஒரு புலியின் காலடித்தடம், அதன் இடம் மாறுதலால் மற்றொரு வனச்சரகத்திலும் அது தவறுதலாக கணக்கிடப்படலாம் என்பதால் புலிகளின் வாழ்விட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள வனப்பகுதிகளில் தொடர்ந்து இக்குழப்பம் நீடித்து வந்தது. புலிகள் ஒரு காட்டில் இருப்பது உறுதியானால், அதுவே அப்பகுதி வனம் செழிப்பாக இருப்பதன் குறியீடாகும்.
மேலும், புலிகளின் நடமாட்டம் மற்றும் அதன் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பல்வேறு வன வளர்ச்சி திட்டங்கள், வன உயிரின பாதுகாப்பு திட்டங்கள் போன்றவை தேசிய புலிகள் காப்பக ஆணையத்தால் வகுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, புலிகளின் எண்ணிக்கையை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துல்லியமாகக் கணக்கிட முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் துவக்கப்பட்டன. முந்தைய முறைப்படி, புலிகள் நடமாட்டம் உள்ள வனத்தை 4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பிரித்துக் கணக்கெடுப்பதை மாற்றி இரண்டு சதுர கிலோமீட்டர் அளவு என மாற்றப்பட்டது.
இதற்கு வன எல்லைகளை சரியாக பிரித்து, முறையாக கணக்கிட முதலில் ஜி.பி.எஸ்., கருவியை கையாள வனத்துறையினருக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

பின்னர், புலிகள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட இடங்களில் நேர்கோட்டில் இருபுறமும் அதன் நடமாட்டத்தை துல்லியமாக பதிவு செய்யும் கேமராக்கள் பொருத்துவதற்கும், அதில் பதிவாகும் புலிகளின் வயது, பாலினம், அதன் உடலில் உள்ள வரிகளின் அடையாளத்தால் புலிகளை பிரித்தறிவது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சி தேசிய புலிகள் காப்பகம் மற்றும் டபுள்யூ.டபுள்யூ.எஃப் (WWF) எனப்படும் உலகளாவிய வன உயிரின நிதியம் அமைப்பை சேர்ந்த வல்லுநர்களால் வனத்துறையினருக்குக் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து, இன்று ஏற்கனவே வனத்துறையினர் பொருத்திய கேமராக்களில் புலிகள் நடமாட்டம் பதிவாகி உறுதி செய்யப்பட்டுள்ள, கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரகங்களில் புலிகளின் துல்லிய கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது.
இந்த இரு வனச்சரகங்களில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. புலிகளின் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ள வனப்பகுதிகளில் மட்டுமே இதுவரை புலிகளின் கணக்கெடுப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த காப்பகத்தை ஒட்டியுள்ள புலிகள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ள வனப்பகுதிகளிலும் கணக்கெடுப்பு பணியை வனத்துறையினர் துவக்கியுள்ளனர்.
இதன்மூலம், நம் நாட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கையினை துல்லியமாக கணக்கிட இயலும் என்கின்றனர் வன உயிரின வல்லுநர்கள்.