நீலகிரி: உதகையில் பிரசித்தி பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் பழுதடைந்து கிடக்கும்அலங்கார நிழற்குடையைப் பராமரிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி: உதகையில் பிரசித்தி பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் பழுதடைந்து கிடக்கும் அலங்கார நிழற்குடையைப் பராமரிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுற்றுலா ஸ்தலங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாகும். இங்கு உலகப் பிரசித்தி பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, அரசு ரோஜா பூங்கா, தொட்டப்பெட்டா மலை சிகரம், படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் போன்ற பல்வேறு சுற்றுலா ஸ்தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா ஸ்தலங்களைக் காண ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், உலகப் பிரசித்தி பெற்ற அரசு தாவரவியல் பூங்காவிலுள்ள இத்தாலியன் பூங்காவிற்கு மேற்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அமரும் வகையில் உள்ள பார்வை மாடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. கடந்த மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அவ்வாறு மழை பெய்யும் நேரங்களில் பூங்காவில் அமைந்துள்ள இதுபோன்ற பார்வை மாடங்களிலும், பூங்காவில் அமைக்கப்பெற்றுள்ள நிழற்குடைகளில் சுற்றுலாப் பயணிகள் ஒதுங்குவர்.

கடந்த சில நாட்களாகப் பூங்காவில் அமைந்துள்ள இந்தப் பார்வையாளர் மாடம் பழுதடைந்தும், பராமரிப்பில்லாமலும் காணப்படுகிறது. எனவே, சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் உள்ளூர் பொதுமக்களும் உடனடியாக, இதனை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு தாவரவியல் பூங்காவிற்கு, உள்நாடு மட்டுமின்றி வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகமாக வருகை புரிகின்றனர், நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியும் வெளிநாட்டவரின் வருகை கணக்குப்பதிவு இங்கு மட்டும் பிரத்யேகமாக பதிவு மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.